ராகுல்காந்தி பாதயாத்திரை நடைபெறும் நிலையில் காஷ்மீரில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு


ராகுல்காந்தி பாதயாத்திரை நடைபெறும் நிலையில் காஷ்மீரில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு
x

காஷ்மீரில் ராகுல் காந்தி பாதயாத்திரை நடைபெறும் நிலையில் நேற்று அங்கு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர்.

வாகனத்தில் வெடிகுண்டு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். காஷ்மீருக்குள் நுழைந்திருக்கும் இந்த பாதயாத்திரைக்கு நேற்று ஓய்வு விடப்பட்டு இருந்தது.

இந்த பாதயாத்திரை மற்றும் குடியரசு தினவிழாவை முன்னிட்டு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக ராகுல் காந்தி செல்லும் வழி நெடுகிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பலத்த பாதுகாப்பையும் மீறி நேற்று ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அங்குள்ள நர்வால் பகுதியில் காலை 10.45 மணி அளவில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது சம்பவம்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அடுத்த 15 நிமிடங்களுக்குள் மேலும் ஒரு வெடிகுண்டு வெடித்தது.இந்த 2 சம்பவங்களிலும் மொத்தம் 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களால் ஜம்முவில் பெரும் பரபரப்பும், பதற்றமும் தொற்றிக்கொண்டது. பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தை சூழ்ந்து விசாரணையை தொடங்கினர். இந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் மறைந்திருந்து இயக்கியிருக்கலாம் என கூறியுள்ள போலீசார், விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

துணைநிலை கவர்னர் கண்டனம்

இந்த இரட்டை குண்டுவெடிப்புக்கு காஷ்மீர் துணைநிலை கவர்னர் சின்கா கண்டனம் தெரிவித்து உள்ளார். சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் நிச்சயம் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து 70 கி.மீ.க்கு அப்பால் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்றுள்ளோர் ஓய்வெடுத்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்கும் இந்த யாத்திரை நாளை ஜம்முவை அடைகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் மாநில காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பா.ஜனதா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

கண்ணிவெடி கண்டுபிடிப்பு

இதற்கிடையே எல்லையோர மாவட்டமான பூஞ்சின் கர்மாரா பகுதியில் ராணுவ சோதனைச்சாவடி அருகே கண்ணிவெடி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததை வீரர்கள் நேற்று கண்டுபிடித்தனர்.

உடனடியாக அதை அங்கிருந்து அப்புறப்படுத்திய வெடிகுண்டு நிபுணர்கள், பின்னர் பாதுகாப்பாக அதை செயலிழக்க வைத்தனர். இரட்டை குண்டுவெடிப்பு மற்றும் கண்ணிவெடி கண்டுபிடிப்பு சம்பவங்களால் காஷ்மீரில் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story