தொட்டிலில் தூங்கிய 2 மாத குழந்தையை தூக்கி சென்று, மாடியில் இருந்து வீசிய குரங்கு


தொட்டிலில் தூங்கிய 2 மாத குழந்தையை தூக்கி சென்று, மாடியில் இருந்து வீசிய குரங்கு
x

கோப்பு படம்

உத்தர பிரதேசத்தில் தொட்டிலில் தூங்கிய 2 மாத குழந்தையை தூக்கி சென்று, மாடியில் இருந்து குரங்கு வீசிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.



பண்டா,


உத்தர பிரதேசத்தில் பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவரது 2 மாத குழந்தை ஒன்று கடந்த செவ்வாய் கிழமை தொட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த வழியே குரங்குகள் கூட்டம் ஒன்று வந்துள்ளது.

அதில், ஒரு குரங்கு வீட்டுக்குள் நுழைந்து குழந்தையை தூக்கி கொண்டு வெளியேறி உள்ளது. குழந்தையை இழுத்து சென்றதில் அது வலியில் அழுதுள்ளது.

அதன் அழுகை சத்தம் கேட்டதும் விஷ்வேஷ்வர் மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால், அதற்குள் குரங்கு மேற்கூரை பகுதிக்கு சென்று விட்டது. இவர்களும் அதன் பின்னே சென்றுள்ளனர்.

குழந்தையை பாதுகாக்கும் முயற்சியாக குரங்கை பயமுறுத்தும் அனைத்து வேலைகளையும் செய்துள்ளனர். ஆனால், அது பலன் தரவில்லை. இந்நிலையில், மேற்கூரைக்கு சென்ற குரங்கு குழந்தையை கீழே வீசி எறிந்துள்ளது.

இதில் அந்த குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக குழந்தையை மீட்டு திந்த்வாரி பகுதியில் உள்ள குடும்ப நல மையத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், குழந்தை உயிரிழந்து விட்டது என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதற்கு முன்பும் இதுபோன்ற, குரங்குகள் கூட்டாக மக்களை தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. வன துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.


Next Story