கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு


கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 4 April 2024 9:06 AM GMT (Updated: 4 April 2024 10:44 AM GMT)

சுமார் 20 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா லச்யானா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. சதீசின் தந்தை சங்கரப்பா வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அங்கு எலுமிச்சை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. சங்கரப்பா, தனது விளைநிலத்தில் நேற்று முன்தினம் புதியதாக ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்தார். ஆனால் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த ஆழ்துளை கிணற்றை மூடாமல் விட்டுள்ளனர்.

விளைநிலத்தின் அருகே வீடு இருப்பதால், சதீசின் குழந்தை விளைநிலப்பகுதிக்கு வந்து அங்கு விளையாடுவது வழக்கம். அதேபோல் நேற்று மாலையில் சாத்விக், விளைநிலத்திற்குள் தவழ்ந்து வந்தான். அந்த குழந்தை விளைநிலத்தில் திறந்த நிலையில் கிடந்த ஆழ்துளை கிணறு அருகே சென்றது. அப்போது அந்த குழந்தை எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. நீண்ட நேரமாகியும் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடி உள்ளனர். அப்போது தான் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுந்தது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் கிராமத்தினரை உதவிக்கு அழைத்தனர். போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் வந்து குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலை 6.30 மணியளவில் மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தற்போது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 20 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story