ஒரேயொரு டுவிட்டர் பதிவு; கர்நாடக அரசியலில் புயலை கிளப்பிய அமுல் நிறுவனம்


ஒரேயொரு டுவிட்டர் பதிவு; கர்நாடக அரசியலில் புயலை கிளப்பிய அமுல் நிறுவனம்
x

காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கன்னடர்கள் அனைவரும் அமுல் தயாரிப்புகளை வாங்க கூடாது என உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் வருகிற மே 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைறும். அந்த மாநிலத்தில், கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் நந்தினி என்ற பெயரில் பால், தயிர், மோர் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விவசாயிகளிடம் இருந்து பாலை மொத்தமாக வாங்கி கர்நாடக பால் கூட்டமைப்பு பால், பாலில் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் கர்நாடகத்தில் ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கு பால், தயிர், மோர் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

இதனால், நந்தினி பால் விற்பனையை முடக்கவும், கர்நாடக பால் கூட்டமைப்பை அழிக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பி உள்ளன.

இதனையடுத்து, அமுல் பால் விற்பனைக்கு அனுமதி வழங்க கூடாது என்றும், அமுல் பாலுக்கு எதிராகவும், கர்நாடகத்தில் நந்தினி பாலை பாதுகாக்கவும், அதற்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நந்தினி பால், தயிர் தவிர மற்ற எந்த நிறுவனத்தை சேர்ந்த பாலையும் வாங்க கூடாது என்ற பிரசாரமும் ஆரம்பமாகி உள்ளது.

இதனால், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள தலைவர்கள், மத்திய கூட்டுறவு துறை மந்திரி அமித்ஷாவுக்கு, கர்நாடகாவில் அமுல் நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டுமா? என வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை ஒன்றை விடுத்து உள்ளனர்.

டுவிட்டரில் 'கோபேக்' அமுல் மற்றும் 'சேவ்நந்தினி' உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. கர்நாடகாவில் உள்ள ஓட்டல் அமைப்புகளும், மாநில விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நந்தினி பால் மட்டுமே பயன்படுத்துவது என்று முடிவு செய்து உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையா கூறும்போது, கன்னடர்கள் அனைவரும் அமுல் தயாரிப்புகளை வாங்க கூடாது என உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

எனினும், நந்தினி பாலுக்கு என்று தனிச்சிறப்பு இருக்கிறது. தரமான நிறுவனம் என்ற பெயர் நந்தினிக்கு உள்ளது. நந்தினி பால் மற்ற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில மாநிலங்களில் நந்தினி பால் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமுல் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது சரியல்ல. மார்க்கெட்டில் நந்தினியை முன்னிலைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.


Next Story