தாயின் மானத்தை காப்பாற்ற தனது ஆபாச புகைப்படங்களை மர்ம நபருக்கு அனுப்பிய இளம்பெண்
பெங்களூருவில் இளம்பெண்ணின் ஆபாச படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூருவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலியல் தொல்லை கொடுப்பது, புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் நடக்கிறது.
பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து அவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். அந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இளம்பெண்ணின் வலைத்தள பக்கத்திற்கு மர்மநபரிடம் இருந்து புகைப்படங்கள் வந்தன. அது இளம்பெண்ணின் தாய் புகைப்படங்கள் ஆகும். அதாவது மர்மநபர் அந்த இளம்பெண்ணுடைய தாயின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி இருந்தார். மேலும் இளம்பெண்ணிடம் அந்த மர்ம நபர், உன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் உனது தாயின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் கூறி மிரட்டினார்.
இதனால் பயந்துபோன அந்த இளம்பெண், தனது தாயின் மானத்தை காப்பாற்ற வேண்டி, யாரிடமும் இதுபற்றி தெரிவிக்காமல் இருந்துள்ளார். பின்னர் அந்த இளம்பெண் தன்னுடைய நிர்வாணப் புகைப்படங்களை மர்மநபருக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை, அவரது நண்பர்கள், உறவினர்களுக்கு மர்ம நபர் அனுப்பி வைத்தார். இதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இளம்பெண்ணிடம் இதுபற்றி அவர்கள் கேட்டுள்ளனர். இதைக்கேட்டு இளம்பெண் அதிர்ந்து போனார். உடனே அவர் இதுபற்றி அம்ருதஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதில் தனது தாயின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து தனக்கு அனுப்பி மிரட்டியதாகவும், அதனால் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை மர்மநபருக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறியிருந்தார்.
அந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த மர்மநபர், இளம்பெண்ணுக்கு நன்கு தெரிந்த நபராக தான் இருக்கும் என தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயின் மானத்தை காக்க முயன்ற இளம்பெண்ணின் ஆபாச படம் வெளியான சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.