22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை - சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. பிரமாணப் பத்திரம் தாக்கல்


22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை - சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. பிரமாணப் பத்திரம் தாக்கல்
x
தினத்தந்தி 13 March 2024 10:43 AM GMT (Updated: 13 March 2024 12:40 PM GMT)

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கும் வகையில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டுவரப்பட்டது. எஸ்.பி.ஐ. வங்கி மூலம் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்றன.

இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி மற்றும் நிதியை கொடுத்தவர்களின் விவரங்களை வெளியிடவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்க ஜுன் 30-ந்தேதி வரை கால அவகாசம் தரும்படி சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. வங்கி மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எஸ்.பி.ஐ. வங்கியின் கோரிக்கையை நிராகரித்ததோடு, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 12-ந்தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டது.

மேலும் எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை மார்ச் 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2024 பிப்ரவரி 15-ந்தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்தல் பத்திரங்களையும் வாங்கிய தேதி, வாங்கியவர்களின் பெயர்கள் மற்றும் வாங்கிய பத்திரங்களின் மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது.


Next Story