மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு


மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு
x

 Photo Credit: PTI

தினத்தந்தி 1 Aug 2023 10:00 AM GMT (Updated: 1 Aug 2023 10:34 AM GMT)

மணிப்பூர் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு முழுவதும் செயலிழந்துவிட்டது. மணிப்பூர் மாநில அரசு மக்களை காப்பாற்றாவிட்டால் அந்த மக்கள் எங்கேதான் போவார்கள்? என்று சுப்ரீம் கோர்ட்டு கடும் அதிருப்தி தெரிவித்தது.

புதுடெல்லி,

மணிப்பூர் பெண்கள் பலாத்காரம், ஆடைகள் இன்றி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது மணிப்பூர் அரசுக்கு கோர்ட்டு சரமாரி கேள்விகளை எழுப்பியது. மேலும் மணிப்பூர் விவகாரத்தில் காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான முதல் தகவல் அறிக்கை எப்போது பதிவு செய்யப்பட்டது? மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக வன்முறை தொடர்ந்த போதும் மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டிருக்கிறது என்று கூறியது.

மேலும், மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு முழுவதும் செயலிழந்துவிட்டது. மணிப்பூர் மாநில அரசு மக்களை காப்பாற்றாவிட்டால் அந்த மக்கள் எங்கேதான் போவார்கள்? மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற மாநில போலீசாரால் முடியவில்லை. சட்டம் - ஒழுங்கு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லாமல் போய்விட்டது. வரும் வெள்ளிக்கிழமை மணிப்பூர் மாநில சட்டம் - ஒழுங்கு டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story