ராட்சத கற்பூரம் ஏற்றியபோது தீ விபத்து; 11 வாகனங்கள் எரிந்து நாசம்


ராட்சத கற்பூரம் ஏற்றியபோது தீ விபத்து; 11 வாகனங்கள் எரிந்து நாசம்
x

தர்மராயசுவாமி கோவில் கரக திருவிழாவின்போது ராட்சத கற்பூரம் ஏற்றியபோது ஏற்பட்ட தீ விபத்தில் 11 வாகனங்கள் எரிந்து நாசமாகின.

பெங்களூரு:

தர்மராயசுவாமி கோவில் கரக திருவிழாவின்போது ராட்சத கற்பூரம் ஏற்றியபோது ஏற்பட்ட தீ விபத்தில் 11 வாகனங்கள் எரிந்து நாசமாகின.

கரக ஊர்வலம்

பெங்களூரு திகளரபேட்டையில் உள்ள தர்மராய சுவாமி கோவிலில் நடைபெறும் கரக திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும். அதன்படி, தற்போது தர்மராயசுவாமி கோவிலில் கரக திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் கோவில் பூசாரியான ஞானேந்திரா கரகத்தை சுமந்து சென்றார். திகளரபேட்டையில் இருந்து கப்பன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கரக ஊர்வலம் நடைபெறும்.

கரக திருவிழாவையொட்டி திரவுபதி தேவிக்கு கற்பூர தீபம் ஏற்றப்படுவது வழக்கம். என்.ஆர்.சர்க்கிளில் இருந்து 700 மீட்டர் தூரம் 3 அடி உயர ராட்சத கற்பூர தீபம் ஏற்றப்படும். அதாவது தர்மராயசுவாமி கோவில் முன்பாக 2 இடங்களில் தலா 50 கிலோ எடையுடன் 3 அடி உயர ராட்சத கற்பூர தீபம் ஏற்றப்படும். அதன்படி, நேற்று மதியம் கற்பூர தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

11 வாகனங்கள் சேதம்

அந்த சந்தர்ப்பத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோவில் திடீரென்று தீப்பிடித்தது. கற்பூர தீபத்தில் இருந்து வாகனங்களுக்கு தீ பரவியது. இதை பார்த்து அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வாகனங்களில் பிடித்த தீயை அணைக்க தண்ணீரை பிடித்து ஊற்றினார்கள். தீயணைப்பு படைவீரர்களும் வரவழைக்கப்பட்டனர். அதற்குள் பக்தர்களே வாகனங்களில் பிடித்த தீயை அணைத்தார்கள். ஆனாலும் 10 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ தீயில் எரிந்து நாசமானது.

கற்பூர தீபம் ஏற்றப்பட்டதற்கு அருகேயே வாகனங்களை நிறுத்தியதால் தீப்பிடித்தது தெரியவந்துள்ளது. கற்பூர தீபம் ஏற்றும் முன்பாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை அப்புறப்படுத்தும்படி பக்தர்களிடம் கூறப்பட்டதாகவும், பக்தர்கள் அலட்சியமாக வாகனங்களை எடுக்காமல் நிறுத்தியதால், தீப்பிடித்ததாகவும் இதற்கு கோவில் நிர்வாகம் பொறுப்பு இல்லை என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் தர்மராயசுவாமி கோவிலில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


Next Story