கார்-சரக்கு வாகனம் மோதல்; 2 பெண்கள் சாவு
மலவள்ளி அருகே கார்-சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஹலகூர்:
மலவள்ளி அருகே கார்-சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார்-சரக்கு வாகனம் மோதல்
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா கே.பி.தொட்டி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சிவனசமுத்திரத்தில் உள்ள மாரம்மா கோவிலுக்கு காரில் சென்றனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள், நேற்று மாலை மலவள்ளி தாலுகா தாசனதொட்டி கிராமத்தின் வந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் மற்றும் சரக்கு வாகனத்தின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.
2 பெண்கள் சாவு
இந்த விபத்தில் இடிபாடுகளிடையே சிக்கி 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெலக்கவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், காயம் அடைந்த 20 பேரையும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் கே.பி.தொட்டி கிராமத்தை சேர்ந்த ஜோஸ்பின் மேரி (வயது 55), பர்லியம்மா (60) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பெலக்கவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.