பெங்களூருவில் நடந்த விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 70 சதவீதம் பேர் சாவு; ஆய்வில் தகவல்
பெங்களூருவில் நடந்த விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் 70 சதவீதம் பேர் உயிர் இழந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் நடந்த விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் 70 சதவீதம் பேர் உயிர் இழந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
633 பேர் விபத்தில் சாவு
பெங்களூருவில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் உயிர் இழந்து வருகின்றனர். அதன்படி, பெங்களூருவில் கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் இருந்து கடந்த ஆண்டு(2022) இறுதி வரை நடந்த விபத்துகளில் 633 பேர் உயிர் இழந்திருந்தனர். மேலும் 2,777 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள். இந்த நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் உயிர் இழப்பதற்கான காரணம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டு இருந்தது.
அதாவது டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் சேர்ந்து இந்த ஆய்வை நடத்தி இருந்தார்கள். பெங்களூரு நகரில் உள்ள 3 முக்கிய சந்திப்புகளில் நடந்த விபத்துகள் பற்றியும், அதில் இருசக்கர வாகன ஓட்டிகள் உயிர் இழந்திருப்பது பற்றியும், அதற்கான காரணங்கள் குறித்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
70 சதவீத இருசக்கர வாகன ஓட்டிகள்
கே.ஆர்.புரம் சிக்னல், ஜே.பி.நகரில் உள்ள சிக்னல், பன்னரகட்டா ரோட்டில் உள்ள சிக்னல்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருந்தது. இந்த ஆய்வில் பெங்களூருவில் நடந்த விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றது, ஹெல்மெட் அணிந்திருந்தாலும் தரமற்ற ஹெல்மெட்களை அணிந்திருந்தது உள்ளிட்ட காரணங்களால் 70 சதவீதம் பேர் உயிர் இழந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக 6 ஆயிரம் வாகன ஓட்டிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்த தகவல் கிடைத்துள்ளது. 82 சதவீதம் பேர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருந்ததும், 52 சதவீதம் பேர் தரமற்ற மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தரமான ஹெல்மெட்டுகளை அணியும்படி ராஜீவ்காந்தி பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.