வெளிநாட்டில் பதுங்கிய பயங்கரவாதியின் கூட்டாளி பெங்களூருவில் கைது


வெளிநாட்டில் பதுங்கிய பயங்கரவாதியின் கூட்டாளி பெங்களூருவில் கைது
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:45 PM GMT)

வெளிநாட்டில் பதுங்கி உள்ள பயங்கரவாதியின் கூட்டாளியை பெங்களூரு போலீசார் சினிமா பாணியில் பிடித்து கைது செய்தனர்.

பெங்களூரு:-

பயங்கரவாதிகள்

பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட ஒரு கும்பல் தயாராக இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி சுல்தான்பாளையாவில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 5 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடத்த தயாரானதும், அவர்கள் பயங்கரவாதிகள் என்பதும் தெரிந்தது.

கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் குற்ற வழக்கு ஒன்றில் அடைக்கப்பட்டபோது பயங்கரவாதிகள் நசீர் மற்றும் ஜுனைத் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதும், அவர்கள் அறிவுரையின்படி நாசவேலைக்கு ஏற்பாடு செய்ததும் தெரிந்தது.

தற்போது ஜுனைத் ஜாமீனில் வெளிவந்து, வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்கும் முயற்சியில் பெங்களூரு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பயங்கரவாதி ஜுனைத்தின் கூட்டாளி ஒருவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பது பற்றி ஆர்.டி.நகர் போலீசாருக்கு தெரிந்தது. இதற்கிடையே போலீசாரால் தேடப்படும் நபர் ஆர்.டி.நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது குறித்து தெரிந்தது.

சினிமா பாணியில்

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட வீட்டை சுற்றிவளைத்தனர். பின்னர் சினிமா பாணியில் வீட்டின் கதவை உடைத்து அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்தவரை போலீசார் பிடிக்க முயன்றனர். அந்த சமயத்தில் அவர் 2-வது மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்றார்.

அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முகமது ஹர்ஷத் கான்(வயது 24) என்பதும், அவர் பயங்கரவாதி ஜுனைத்தின் கூட்டாளி என்பதும் தெரிந்தது. அவர் கடந்த 2017-ம் ஆண்டு நூர் அகமது என்பவரை கடத்தி சென்று கொலை செய்தார். முகமது ஹர்ஷத் கான் மீது 17 கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.

இதுதொடர்பாக போலீசார் அவரை தொடர்ந்து தேடி வந்ததும் தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story