பெங்களூருவில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கர்நாடக காங்கிரசாருக்கு அதிரடி உத்தரவு


பெங்களூருவில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கர்நாடக காங்கிரசாருக்கு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:45 PM GMT)

பெங்களூருவில் நேற்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூடடம் நடந்தது. இதில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகும்படி மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கூட்டத்தில், முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி, செயல் தலைவர்கள் ஈஸ்வர் கன்ட்ரே, சலீம் அகமது, மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், கே.எச்.முனியப்பா, தினேஷ் குண்டுராவ் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கட்சியின் மாநில தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

நமது அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளோம். இதை சகித்துக்கொள்ள முடியாத பா.ஜனதாவினர் நமது அரசு மீது பொய் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். என் மீது அவர்கள் கூறும் குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். பிறரை போல் என்னையும் மிரட்ட நினைப்பது சரியல்ல. அது சாத்தியமில்லை. நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்.

நான் எப்போதும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த மாட்டேன். வரும் நாட்களில் முந்தைய பா.ஜனதா அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன். பா.ஜனதாவால் இன்னும் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. முந்தைய பா.ஜனதா ஆட்சியில் ஒரு தொகுதியில் எந்த பணிகளையும் செய்யாமல் ரூ.117 கோடி பெற்று முறைகேடு செய்துள்ளனர். இதை லோக்அயுக்தா கூறியுள்ளது. அதுகுறித்து நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.

நாங்கள் இந்த விசாரணைக்கு உத்தரவிட்டதும், என் மீது கமிஷன் குற்றச்சாட்டை கூறியுள்ளனர். முந்தைய பா.ஜனதாவின் ஊழல்களை மக்களுக்கு தெரிவிப்பது தான் நமது முதல் பணி. நமது அடுத்த இலக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் 2028-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலும் இருக்க வேண்டும். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு முக்கியம். நமது உத்தரவாத திட்டங்களை மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பாராட்டினர்.

நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியது இல்லை. பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை 243-ல் இருந்து 225 ஆக குறைத்துள்ளோம். இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் வழங்கப்படும். மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் மற்றும் பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு கோர்ட்டு அனுமதி வழங்கினால், தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது. பிளாக் அளவில் கட்சி அலுவலகம் இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நீங்கள் தயாராக வேண்டும்.

முதல்-மந்திரியும், நானும் மாவட்டம் வாரியாக எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசியுள்ளோம். இன்னும் சில மாவட்டங்களின் எம்.எல்.ஏ.க்களுடன் பேச வேண்டியுள்ளது. மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற நாங்கள் சிறப்பாக பணியாற்றுவோம். கர்நாடகம் மாதிரியில் தனிப்பட்ட விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று பிற மாநிலங்களின் கட்சி தலைவர்களுக்கு மேலிடம் அறிவுரை வழங்கியுள்ளது.

நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் காங்கிரசுடன் கைகோர்த்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெங்களூருவில் தான் முடிவு செய்யப்பட்டது. ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பா.ஜனதாவினர் சதி செய்து தகுதி நீக்கம் செய்தனர். சுப்ரீம் கோர்ட்டு தலையீட்டால் அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளது. ராகுல் காந்தி கர்நாடகத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.


Next Story