பெங்களூருவில் கண்டக்டராக வேலை செய்த பஸ் பணிமனையில் நடிகர் ரஜினிகாந்த்


பெங்களூருவில் கண்டக்டராக வேலை செய்த பஸ் பணிமனையில் நடிகர் ரஜினிகாந்த்
x

நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென பெங்களூருவுக்கு வந்தார். அவர் தான் பணியாற்றிய அரசு பஸ் பணிமனை மற்றும் தான் படித்த பள்ளிக்கூடத்துக்கு சென்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவருடன் அரசு பஸ் ஊழியர்கள் ‘செல்பி’ புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

பெங்களூரு:

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படம் இதுவரை சுமார் ரூ.500 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த படம் வெளியானதை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். அங்கு தனது ஆன்மிக பயணத்தை முடித்துக் கொண்டு உத்தரபிரதேசத்திற்கு சென்றார். அங்கு அந்த மாநில முதல்-மந்திரி யோகிஆதித்யநாத், எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும் அங்கு துணை முதல்-மந்திரியுடன் சேர்ந்து 'ஜெயிலர்' படத்தையும் பார்த்தார். பிறகு அயோத்தி ராமர்கோவிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று திடீரென பெங்களூருவுக்கு வந்தார். அவர் காலை 11.30 மணியளவில் ஜெயநகரில் உள்ள பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) பணிமனைக்கு வந்தார். அவரை கண்டதும் பி.எம்.டி.சி. ஊழியர்கள் ஆச்சரியமும், உற்சாகமும் அடைந்தனர். அவர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சிறிது நேரம் கலந்துரையாடி தான் பி.எம்.டி.சி. பஸ்சில் பணியாற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவருடன் 'செல்பி' புகைப்படம் எடுத்துக்கொள்ள ஊழியர்கள் முண்டியடித்தனர். அவர் பி.எம்.டி.சி.யில் வேலை பார்த்த காலக்கட்டத்தில் அந்த பணிமனையில் தான் பணியாற்றினார். அதனால் அவர் அங்கு வந்து, தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மிகுந்த மகிழ்ச்சி அடைந்த ஊழியர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் வந்ததால், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. சிலர் தங்களின் செல்போனில் ஆர்வமாக அவருடன் 'செல்பி' எடுத்தனர். சிறிது நேரம் உரையாடிவிட்டு ரஜினிகாந்த் அங்கிருந்து சாமராஜ் பேட்டைக்கு வந்தார்.

அங்குள்ள ராகவேந்திரா மடத்திற்கு சென்று மடாதிபதியிடம் ஆசி பெற்றார். பிறகு பசவனக்குடிக்கு வந்தார்.அங்குள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்று மடாதிபதியிடம் ஆசி பெற்றார். பின்னர் அதே பகுதியில் உள்ள தான் படித்த அரசு தொடக்க பள்ளிக்கு வந்தார். அதையடுத்து அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார். நடிகர் ரஜினிகாந்த் திடீரென பெங்களூருவில் வலம் வந்ததை கண்டு அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அவரை பார்ப்பதற்கு கூட்டம் அலைமோதியது.


Next Story