ராஜேந்திர பாலாஜியின் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ராஜேந்திர பாலாஜியின் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி புகார் தொடர்பான வழக்கில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் ரிட் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதுடன், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலைய எல்லையைத் தாண்டி ராஜேந்திர பாலாஜி பயணிக்கக் கூடாது என கடந்த ஜனவரி 12-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு கடந்த செப்டம்பர் 12-ந்தேதி விசாரித்தது.

குற்றப்பத்திரிகை

ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, கடந்த பிப்ரவரிக்கு பின்னர் விசாரணைக்கு மனுதாரர் அழைக்கப்படவில்லை. இந்த வாரத்தில் உண்மையான குற்றம் சாட்டப்பட்ட நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அரசியல்வாதி என்பதால் தமிழகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அவருடைய கடவுச்சீட்டு காலாவதியாகிவிட்டதால் அதை புதுப்பிக்கவும் அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல் வி.கிருஷ்ணமூர்த்தி, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, பிற மாவட்டங்களைச் சேர்ந்த சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டி உள்ளது. குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதால் நிபந்தனையை ஒரு மாதத்திற்கு பிறகே தளர்த்த வேண்டும் என வாதிட்டார்.

எல்லையை தாண்டக்கூடாது

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு,

இடைக்கால ஜாமீனை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்ததுடன், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலைய எல்லையைத் தாண்டக் கூடாது என்ற நிபந்தனையை தளர்த்தி தமிழக முழுவதும் பயணம் செய்யவும், கடவுச்சீட்டை புதுப்பிக்கவும் அனுமதி அளித்தது. மேலும், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

இந்த நிலையில், நேற்று இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, மனுதாரர் பொது வாழ்வில் இருப்பதால், நாடு முழுவதும் பயணம் செய்யும் வகையில் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்றும், மனுதாரருக்கு எதிராக பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரிட் மனுவை விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.

தள்ளிவைப்பு

அப்போது, தமிழக அரசின் சார்பில் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி, வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் தொடரக்கூடாது. இதுதொடர்பாக தமிழக அரசிடம் ஆலோசனை பெற வேண்டும் என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு,

ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனு மீதான இறுதி விசாரணையை நவம்பர் 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.


Next Story