"திமுகவை எதிர்க்கும் திராணி உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே" - பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
திமுகவை எதிர்க்கும் திராணிஉள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை,
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும், தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அங்கீகாரம் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் திமுகவை எதிர்க்கும் திராணி ஒரே கட்சி அதிமுக மட்டுமே என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே நீதிமன்றமும், பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்பையும் வழங்கியிருந்தது. அதிமுகவைப் பொறுத்தவரை இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும்.
கட்சியின் தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியிலும் வீறுநடை போடும். ஏற்கெனவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அந்தத் தேர்தலில் கட்சியினுடைய அனைத்து பொது உறுப்பினர்களும் வாக்களிக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கி ஏகமனதாக உறுப்பினர்கள் பொதுச் செயலாளராக என்னை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அனைத்து நிர்வாகிகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட சட்டப்போரட்டத்தை நடத்திதான் இந்த வெற்றியை பெற்றிருக்கிறோம். . எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் குறித்து மீண்டும் சபாநாயகரிடம் முறையிடுவோம். தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி உள்ளது. கர்நாடகத்தில் எங்கள் அடையாளத்தை காட்ட ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம்.
திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என்பதே எங்களது லட்சியம். ஒற்றைத்தலைமை என்று சொல்ல வேண்டாம்.. நான் எப்போதும் சாதாரண தொண்டன் தான். திமுகவை எதிர்க்க திராணி உள்ள ஒரே கட்சி அதிமுக தான்.
மற்றவர்களை பற்றி பேசி எங்கள் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம். ஒரு சிலர் யார் என்று உங்களுக்கே தெரியும். கட்சிக்கு மக்களிடத்தில் பேராதரவு உள்ளது. எனவே எந்த குழப்பத்துக்கும் இடமில்லை. மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வரும்" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.