அஜித்பவார் கட்சியில் தான் உள்ளார்.. தேசியவாத காங்கிரஸ் உடையவில்லை: சரத்பவார் பரபரப்பு பேட்டி


அஜித்பவார் கட்சியில் தான் உள்ளார்.. தேசியவாத காங்கிரஸ் உடையவில்லை: சரத்பவார் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 26 Aug 2023 7:53 AM IST (Updated: 26 Aug 2023 9:20 AM IST)
t-max-icont-min-icon

அஜித்பவார் கட்சியில் தான் உள்ளார், தேசியவாத காங்கிரஸ் உடையவில்லை என சரத்பவார் கூறியுள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரசில் பிளவு

மராட்டியத்தில் சிவசேனா, பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த மாதம் 2-ந் தேதி தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைந்தார்.

அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், சகன் புஜ்பால், ஹசன் முஷ்ரிப், தனஞ்செய் முண்டே, அதீதி தட்காரே உள்ளிட்ட மூத்த தலைவர்கள், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இதன் காரணமாக தேசியவாத காங்கிரஸ் சரத்பவார், அஜித்பவார் தலைமையில் 2 ஆக உடைந்தது. 2 பேரும் போட்டி கூட்டங்களை நடத்தினர். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிா்வாகிகள் அஜித்பவாருக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது.

ரகசிய சந்திப்பு

இதற்கிடையே சமீபத்தில் புனேயில் சரத்பவார், அஜித்பவார் ரகசியமாக சந்தித்து பேசியது மீண்டும் மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பை அடுத்து சரத்பவார் அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து பா.ஜனதாவுடன் ஒருபோதும் கூட்டணி சேரமாட்டேன் என சரத்பவார் கூறியிருந்தார்.

கட்சி உடையவில்லை

இந்தநிலையில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, "அஜித்பவார் எங்கள் கட்சியின் மூத்த தலைவர். எம்.எல்.ஏ.. தற்போது அவர் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்ளார். இது தொடர்பாக சபாநாயகரிடம் புகார் அளித்து உள்ளோம். அவரின் பதிலுக்காக காத்து இருக்கிறோம்" என கூறியிருந்தார். தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

கட்சி உடையவில்லை என சுப்ரியா சுலே கூறியது தொடர்பாக நேற்று காலை பாராமதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், "ஆம், கட்சி உடைந்தது என்ற கேள்விக்கே இடமில்லை" என்றார்.

இதற்கிடையே சரத்பவார், அஜித்பவாரை தனது தலைவர் என கூறியதாக தகவல் பரவியது. இது தொடர்பாக அவர் சத்தாராவில் கூறுகையில், "அஜித்பவார் எனக்கு தலைவர் என நான் கூறவில்லை. இளையவர் என்பதால் சுப்ரியா சுலே அஜித்பவாரை தலைவர் என கூறிக்கொள்ளலாம். இதற்கு அரசியல் அர்த்தம் தேடவேண்டியதில்லை" என்றார்.


Next Story