முந்தைய அரசுகளை கவிழ்க்கவே கூட்டணியை காங்கிரஸ் பயன்படுத்தியது - பிரதமர் மோடி பேச்சு


முந்தைய அரசுகளை கவிழ்க்கவே கூட்டணியை காங்கிரஸ் பயன்படுத்தியது - பிரதமர் மோடி பேச்சு
x

முந்தைய அரசுகளை கவிழ்க்கவே கூட்டணியை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

பாதிப்பை ஏற்படுத்தவே...

'கடந்த 90'களில் நாட்டின் நிலைத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தவே காங்கிரஸ் கட்சி, கூட்டணிகளை பயன்படுத்தியது. காங்கிரஸ், அரசுகளை அமைத்தது, அவற்றைக் கவிழ்த்தது.

அதிகார நிர்ப்பந்தத்தில், ஊழல் நோக்கத்தில், உறவுகளுக்கு பதவி கொடுக்கும் இலக்கில், சாதி, பிராந்திய எண்ணத்தில் உருவாகும் கூட்டணி, நாட்டுக்கு தீமையானது. எதிர்மறைத்தன்மையுடன் அமையும் எந்த கூட்டணியும் வெற்றி பெறாது.

தேசிய ஜனநாயக கூட்டணி

ஆனால் எங்களின் கூட்டணி, நிர்ப்பந்தத்தில் அமையவில்லை. மாறாக இளைஞர்கள், பெண்கள், நடுத்தர வர்க்கத்தினர், தலித்துகளுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.)யின் விரிவாக்கம், புதிய இந்தியா, வளர்ந்த தேசம், இந்திய மக்களின் அபிலாஷைகள் என்பதாகும்.

1998-ல் உருவாக்கப்பட்ட இந்த கூட்டணியின் நோக்கம், அரசை அமைப்பதும், அதிகாரத்தைப் பெறுவதும் அல்ல. யாருக்கு எதிராகவும், யாரையும் ஆட்சியில் இருந்து நீக்கவும் இந்த கூட்டணி உருவாக்கப்படவில்லை. மாறாக, நாட்டில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவே அமைக்கப்பட்டது.

ஒரு நாட்டில் நிலையான அரசு அமையும்போதுதான், அதனால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியும். அதனால், நாட்டின் திசையும் மாறும்.

முந்தைய கூட்டணி ஆட்சியில்

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொள்கை செயலிழப்பு, முடிவெடுக்க இயலாமை, குழப்பம், நம்பிக்கையின்மை, முறைகேடு, லட்சக்கணக்கான கோடி ஊழல் என்ற நிலைதான் நிலவியது. ஆளும் அரசுக்கு எதிராக நாங்கள் வெளிநாட்டு சக்திகளின் உதவியைப் பெறவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களில் தடைகளை ஏற்படுத்தவில்லை.

மூன்றாவது முறையாக

நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எந்த வாய்ப்பையும் நாங்கள் தவறவிடவில்லை. அதன் விளைவாக, 2015-16-க்கு பிறகு சுமார் 13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

வருகிற மக்களவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகள் கடுமையாக உழைப்பதால் 50 சதவீத வாக்கு பங்கை பெறுவோம். மூன்றாவது முறையாக நம்மை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என்று அவர் பேசினார்.


Next Story