மோசமான வானிலையால் அமித்ஷாவின் அரியானா பயணம் ரத்து


மோசமான வானிலையால் அமித்ஷாவின் அரியானா பயணம் ரத்து
x

கோப்புப்படம்

மோசமான வானிலையால் அமித்ஷாவின் அரியானா பயணம் ரத்து செய்யப்பட்டதால், பொதுக்கூட்டத்தில் அவர் தொலைபேசி வாயிலாக பேசினார்.

கோஹானா,

அரியானா மாநிலம் கோஹானா நகரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா திட்டமிட்டிருந்தார். ஆனால் கோஹானாவில் நிலவிய மோசமான வானிலையின் காரணமாக அமித்ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் பேசிய அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார், மோசமான வானிலை காரணமாக அமித்ஷாவின் ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி வழங்கப்படாததால் அவரால் பொதுக்கூடத்துக்கு வர முடியாமல் போனதாக கூறினார். அதனை தொடர்ந்து, அமித்ஷா பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்தவர்கள் மத்தியில் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது அவர், "நான் இந்த பொதுக்கூட்டத்தில் உங்களை சந்திக்க விரும்பினேன், ஆனால் மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி வழங்கப்படவில்லை. நான் ஒரு காரில் சாலை வழியாக வர விரும்பினேன், ஆனால் அங்கு வானிலை மோசமாக உள்ளது. மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மனோகர் நான் உங்களிடம் தொலைபேசியில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்" என கூறினார். தொடர்ந்து அவர் சிறிது நேரம் மக்கள் மத்தியில் பேசினார்.


Next Story