அமித்ஷா 2 நாட்கள் பயணமாக இன்று கர்நாடகம் வருகை
கர்நாடக சட்டசபைக்கு சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று (வியாழக்கிழமை) கர்நாடகம் வருகிறார். நாளை மண்டியாவில் நடைபெறும் பா.ஜனதா மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று (வியாழக்கிழமை) கர்நாடகம் வருகிறார். நாளை மண்டியாவில் நடைபெறும் பா.ஜனதா மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
சட்டசபை தேர்தல்
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் நெருங்கி வருவதால், ஆளும் பா.ஜனதா உள்பட அனைத்துக்கட்சிகளும் வரிந்து கட்டி கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் பா.ஜனதா பலவீனமாக உள்ள மைசூரு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. எப்படியாவது செயல்பட்டு ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பா.ஜனதா தலைவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் காய் நகர்த்தி வருகிறார்கள்.
அமித்ஷா இன்று வருகை
இந்த நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று (வியாழக்கிழமை) கர்நாடகம் வருகிறார். இரவு 10 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் அவர், ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ் வெஸ்ட் என்ட் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 12.15 மணி வரை கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தனியாக சந்தித்து பேச அவர் திட்டமிட்டு உள்ளார்.
பா.ஜனதா மாநாடு
அதன் பிறகு பகல் 1.10 மணிக்கு எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டியாவுக்கு புறப்பட்டு செல்கிறார். 1.45 மணிக்கு மண்டியா அரசு ஆண்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பா.ஜனதா மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் கட்சி தொண்டர்கள் ஒரு லட்சம் பேரை கூட்ட நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அங்கு அவர் பகல் 3.15 மணி வரை இருப்பார். மாலை 5.20 மணிக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் எலகங்காவுக்கு திரும்புகிறார்.
மாலை 6.45 மணிக்கு பெங்களூருவில் நடைபெற உள்ள கூட்டுறவுத்துறை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்து, சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் தாஜ் வெஸ்ட் என்ட் ஓட்டலில் தங்குகிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தேவனஹள்ளி தாலுகா அவதி கிராமத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொள்கிறார். மதியம் 1 மணிக்கு அவர் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள சவுஹார்த கூட்டுறவு கூட்டமைப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து அங்கு நிர்வாகிகளுடன் உரையாட இருக்கிறார். பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஓட்டலில் தங்குகிறார்.
1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அவர் டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அமித்ஷா வருகையை முன்னிட்டு அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அமித்ஷா கர்நாடகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கட்சிக்கு பலத்தை அளிக்கும் என்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
அமித்ஷா வருகையால் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.