குஜராத்தில் உள்நாட்டில் தயாரான 700 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை; பிரதமர் மகிழ்ச்சி
குஜராத்தில் முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரான 700 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை முழு அளவில் செயல்பட தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,
குஜராத்தின் காக்ராபர் நகரில் இந்திய அணு சக்தி கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் 700 மெகா வாட் திறன் படைத்த 2 அணு உலைகளை கட்டமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நகரில் முன்பே, 220 மெகா வாட் திறன் கொண்ட 2 சக்தி உலைகள் உள்ளன.
நாடு முழுவதும் இதுபோன்ற 700 மெகா வாட் திறன் கொண்ட 16 உலைகளை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான நிதி மற்றும் நிர்வாக ஒப்புதல்கள் வழங்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், குஜராத்தில் முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரான 700 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை முழு அளவில் செயல்பட தொடங்கியுள்ளது என பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஜூன் 30-ந்தேதி இதன் வர்த்தக இயக்கங்கள் செயல்பட தொடங்கின. எனினும், இதுவரை 90 சதவீதம் அளவுக்கே செயல்பாடுகள் இருந்து வந்தன.
கடந்த ஜூலையில், 97.56 சதவீதம் என்ற அளவில் அது சாதனை வளர்ச்சி கண்டது. இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில், இந்தியா மற்றொரு மைல்கல்லை அடைந்து சாதனை படைத்திருக்கிறது.
குஜராத்தில் உள்ள நாட்டின் முதல், பெரிய உள்நாட்டிலேயே உற்பத்தியான 700 மெகா வாட் திறன் கொண்ட காக்ராபர் அணு உலையின் யூனிட்-3 முழு அளவில் செயல்பட தொடங்கியுள்ளது. நம்முடைய விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.