நாகார்ஜுனா சாகர் அணையில் அனுமதியின்றி தண்ணீர் திறப்பு: ஆந்திரா - தெலுங்கானா இடையே மோதல்


நாகார்ஜுனா சாகர் அணையில் அனுமதியின்றி தண்ணீர் திறப்பு: ஆந்திரா - தெலுங்கானா இடையே மோதல்
x

அணையின் பாதுகாப்பு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர - தெலுங்கான மாநிலங்களுக்கு இடையே கிருஷ்ணா நதி பாய்கிறது . அந்த நதிக்கு குறுக்கில் நாகார்ஜுனா சாகர் அணை அமைந்துள்ளது. அணையின் பாதுகாப்புகள் அனைத்தும் தெலுங்கானாவின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் கிட்டத்தட்ட 700 ஆந்திர போலீசார் அணைக்குள் நுழைந்து வலது கால்வாயை திறக்க முயன்றனர். இதை தடுக்க தெலுங்கானா போலீசார் முயன்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இச்சம்பவம் பற்றி ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி அம்பதி ராம்பாபு தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் "நாகார்ஜுனாசாகர் வலது கால்வாயில் இருந்து குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்து விடுகிறோம்" என தெரிவித்துள்ளது.

அணை பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த தெலுங்கானா போலீசாருடன், ஆந்திர போலீசார் மோதலில் ஈடுபட்டனர். பின்னர், அணை பாதுகாப்பு நிர்வாகத்தை கைப்பற்றிய ஆந்திர போலீசார், அணையின் கேட் 5 மற்றும் 7ல் உள்ள நீரை மணிக்கு சுமார் 5,000 கன அடி திறந்துவிட்டனர் என தெலுங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் மத்திய அரசு ரிசர்வ் போலீஸ் படை சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மேலும் மோதலைத் தவிர்க்க, தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில உள்துறை செயலாளர்களுடன் வீடியோ கால் மூலம் பேசிய மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா இரு தரப்பையும் சமாதானப்படுத்தினார்.

இதையடுத்து, அணையை மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மேற்பார்வையிடும். மேலும், ஒப்பந்தத்தின்படி இரு தரப்புக்கும் தண்ணீர் வருவதைக் கண்காணிக்கும் என்று கூறினார். இந்த திட்டத்திற்கு இரு மாநிலங்களும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திரா போலீசார் மீது தெலுங்கானா நல்கொண்டா நகரில் போலீசார் 2 வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story