'ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 21-ம் நுற்றாண்டின் கவுரவர்கள்' கருத்து - ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு
மோடி என்ற சமூகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை வித்துள்ளது.
ஹரித்வார்,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு 'அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
மோடி என்ற சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரவையின் கீழ் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் மோடி என்ற சமூகம் இடம்பெறவில்லை. மோடி என்று சமூகமே (ஜாதி) கிடையாது என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளில் உள்ளது.
அதேவேளை, குஜராத், உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் வசிக்கும் இந்து, இஸ்லாம், பார்சி மதங்களை சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினர் தங்கள் பெயர்களுக்கு பின்னால் மோடி என்ற புனைப்பெயரை குடும்ப பெயராக வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனிடையே, மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிவிட்டதாக சூரத் கோர்ட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 24-ம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதேவேளை, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய ராகுல்காந்திக்கு அவகாசம் வழங்கி 30 நாட்கள் ஜாமினும் வழங்கியது.
அவதூறு வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர் அரசு பங்களாவில் இருந்து காலி செய்யும்படியும் மக்களவை செயலகம் கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல்காந்தி மீது மற்றொரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் என்று கூறினார்.
2023 ஜனவரி 9-ம் தேதி அரியானாவின் அம்பாலாவில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது பேசிய ராகுல்காந்தி, யார் கவுரவர்கள்? முதலில் 21-ம் நூற்றாண்டு கவுரவர்கள் பற்றி உங்களிடம் கூறுகிறேன். அவர்கள் காக்கி நிறத்தில் அரைக்கால் சட்டை போட்டிருப்பார்கள், கையில் லத்தி வைத்திருப்பார்கள். இந்தியாவின் 2, 3 பெரும்பணக்காரர்கள் கவுரவர்களுடன் நிற்கின்றனர்' என்றார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கவுரவர்களுடன் ஒப்பிட்டதாக ராகுல்காந்தி மீது உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராகுல்காந்தி மீது ஹரித்வாரை சேர்ந்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கமல் பதாரியா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 12-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக கமல் பக்தாரியாவின் வழக்கறிஞர் அருண் பதாரியா கூறியுள்ளார்.