ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து ராணுவ வீரர் பலியான சோகம்
திருமண தேதியை முடிவு செய்ய ஊருக்கு வந்த போது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெலகாவி ராணுவ வீரர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
பெலகாவி:
திருமண தேதியை முடிவு செய்ய ஊருக்கு வந்த போது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெலகாவி ராணுவ வீரர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
ராணுவ வீரர்
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகா கனசகேரி கிராமத்தை சேர்ந்தவர் காசிநாத் ஷின்டிகாரா (வயது 28). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.
தற்போது இவர் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுடன் பெற்றோர் திருமணம் பேசி நிச்சயித்து இருந்தனர். அதன்படி திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
இந்த நிலையில், காசிநாத்துக்கு திருமணம் தேதி முடிவு செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதனால் அவரை ஊருக்கு வரும்படி அழைப்பு விடுத்து இருந்தனர். இதன்காரணமாக அவர் நேற்று முன்தினம் பஞ்சாப்பில் இருந்து ரெயிலில் சொந்த ஊருக்கு விடுமுறையில் புறப்பட்டார்.
ஓடும் ரெயிலில் தவறி விழுந்து பலி
பஞ்சாப் மாநிலம் லூதியானா ரெயில் நிலையம் அருகே ஓடும் ரெயிலில் வாசல் அருகே நின்றுபடி பயணம் செய்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் ரெயிலில் இருந்து காசிநாத் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த லூதியானா ரெயில்வே போலீசார், காசிநாத் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி ராணுவ அமைச்சகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், காசிநாத்தின் பெற்றோருக்கு இந்த சம்பவம் பற்றி தகவல் அளித்தனர்.
கிராமமே சோகம்
இதனால் அவரது பெற்றோர், மணமகள் வீட்டார் அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதபடி உள்ளனர்.
திருமண தேதியை முடிவு செய்ய சொந்த ஊருக்கு ரெயிலில் வந்த ராணுவ வீரர் பலியான சம்பவம் அவரது சொந்த கிராமமக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.