நகைகள் திருடி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்: 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பிய நபர் கைது


நகைகள் திருடி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்: 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பிய நபர் கைது
x

26 பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்தவரை, 16 ஆண்டுகளுக்கு பின்னர் சாலக்குடி போலீசார் கைது செய்தனர்.

கேரளா:

திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அருகே தோட்டக்கரா பகுதியை சேர்ந்தவர் டேவிட். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2006-ம் ஆண்டு டேவிட் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றனர்.

அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 7 பேர் 26.5 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். இந்த திருட்டில் தொடர்புடைய 6 பேரை சாலக்குடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பத்தினம்திட்டா மாவட்டம் குளநடா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 39) என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். ராஜேஷ் குமார் திருட்டு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடி, சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றார். தொடர்ந்து அங்கேயே வசித்து வந்தார். இதனால் திருட்டு வழக்கில் ராஜேஷ் குமார் பிடிக்கப்பட முடியாத குற்றவாளியாகவும், தேடப்படும் குற்றவாளியாகவும் சாலக்குடி முதல் வகுப்பு நீதிமன்றம் அறிவித்து இருந்தது.

இந்தநிலையில் சமீபத்தில் அவர் நாடு திரும்பியதாக சாலக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சந்தோஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து அவரை கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திப், சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் அப்துல் காதர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இலவந்திட்டா போலீசார் உதவியுடன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

பின்னர் அவர் சாலக்குடி முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story