பா.ஜ.க.வில் சேர கட்டாயப்படுத்தினார்கள்; அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு


பா.ஜ.க.வில் சேர கட்டாயப்படுத்தினார்கள்; அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Feb 2024 9:57 AM GMT (Updated: 4 Feb 2024 10:54 AM GMT)

பா.ஜ.க.வில் சேருமாறு என்னை சிலர் கட்டாயப்படுத்தினார்கள் என்றும் நான் ஒருபோதும் வளைந்து கொடுக்கப் போவது இல்லை எனவும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 7 பேரிடம் தலா ரூ.25 கோடி பேரம் நடைபெற்றிருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசியது தொடர்பான ஆதாரங்களை அளிக்குமாறு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அளித்தனர். மேலும் விசாரணையையும் குற்றப்பிரிவு போலீசார் தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பா.ஜ.க.வில் சேருமாறு தன்னை சிலர் கட்டாயப்படுத்தியதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கெஜ்ரிவால் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: -

எனக்கு எதிராக எந்த ஒரு சதி திட்டத்தையும் தீட்டலாம். நானும் உறுதியாக இருக்கிறேன். நான் ஒருபோதும் வளைந்து கொடுக்கப்போவது இல்லை. பா.ஜ.க.வில் சேர்ந்து விடுங்கள்.. விட்டு விடுகிறோம் என்று என்னிடம் கூறினார்கள். ஆனால், ஒருபோதும் பா.ஜ.க.வில் சேரமாட்டேன் என்று அவர்களிடம் நான் திட்டவட்டமாக கூறினேன். நான் ஒருபோதும் பா.ஜ.க.வில் சேரப்போவதே இல்லை" என்றார்.


Next Story