'மோடி என்பதன் பொருளை ஊழல் என மாற்றுங்கள்' பாஜக குஷ்புவின் பழைய டுவிட் - கையில் எடுத்த காங்கிரஸ்...!


மோடி என்பதன் பொருளை ஊழல் என மாற்றுங்கள் பாஜக குஷ்புவின் பழைய டுவிட் - கையில் எடுத்த காங்கிரஸ்...!
x

மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு 'அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

மோடியின் பெயர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியிருந்ததாக கூறி ராகுல்காந்தி மீது பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் முன்தினம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவியும் தற்போதைய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையாகி வருகிறது.

பாஜக பொதுக்குழு உறுப்பினரான குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது கடந்த 2018 பிப்ரவரி 15-ம் தேதி மோடி குறித்து டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். குஷ்பு பதிவிட்ட டுவிட்டில்,

மோடி என்பதன் பொருளை ஊழல் என்று மாற்றுவோம் அது தான் சரியாக இருக்கும்... நிரவ், லலித், நமோ என்றால் ஊழல்' என்று பதிவிட்டிருந்தார்.

மோடி குறித்து பேசியதற்காக ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாஜகவில் உள்ள குஷ்புவும் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்துள்ளதால் இது தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், பாஜக பொதுக்குழு உறுப்பினர் குஷ்பு மீது அவதூறு வழக்கு தொடரவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம் பூதாகாரமாகி வரும் நிலையில் தான் தனது பழைய டுவிட்டை அழிக்கப்போவதில்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.



Next Story