தலீபான்கள் ஆயுதங்களை எடுத்ததுபோல், அரசு சி.பி.ஐ. அமைப்பை பயன்படுத்துகிறது: சஞ்சய் ராவத் பேச்சு


தலீபான்கள் ஆயுதங்களை எடுத்ததுபோல், அரசு சி.பி.ஐ. அமைப்பை பயன்படுத்துகிறது: சஞ்சய் ராவத் பேச்சு
x

அல்-கொய்தா, தலீபான்கள் எதிரிகளை ஒழிக்க ஆயுதங்களை எடுத்ததுபோல், அரசு சி.பி.ஐ. அமைப்பை பயன்படுத்துகிறது என எம்.பி. சஞ்சய் ராவத் பேசியுள்ளார்.


புனே,


டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து கடந்த பிப்ரவரி 26-ந்தேதி நேரடி விசாரணை நடைபெற்றது.

8 மணி நேர விசாரணை முடிவில், சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் 4-ந்தேதி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, சிசோடியாவின் சி.பி.ஐ. காவல் 6-ந்தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சிசோடியா விவகாரத்தில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் உள்பட 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

கெஜ்ரிவால் தவிர, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, தேசியவாத கட்சி தலைவர் சரத் பவார், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் என எதிர்க்கட்சிகளை சேர்ந்த 9 தலைவர்களின் பெயர் அந்த கடிதத்தில் கையொப்பமிடும் பகுதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதில், டெல்லி முன்னாள் முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. டெல்லி பள்ளி கல்வியை உருமாற்றியதற்காக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டவர் சிசோடியா என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தில், எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் பா.ஜ.க.வில் இணைந்த பின்னர், அவர்கள் மீதுள்ள வழக்குகள் மீது விசாரணை மெதுவாக நடக்கிறது என சுட்டி காட்டியுள்ளதுடன், எடுத்துக்காட்டாக சில விசயங்களையும் தெரிவித்தது. அதன்படி, முன்னாள் காங்கிரஸ் உறுப்பினராக இருந்து, தற்போது பா.ஜ.க. ஆளும் அசாமின் முதல்-மந்திரியாக உள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது சாரதா சிட்பண்டு வழக்கில் 2014 மற்றும் 2015-ம் ஆண்டில் சி.பி.ஐ., அமலாக்க துறை விசாரணை நடந்தது.

பா.ஜ.க.வில் சேர்ந்த பின்னர் அந்த வழக்கில் முன்னேற்றம் காணப்படவில்லை. இதே நிலை, அக்கட்சியில் சேர்ந்த முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களான சுவேந்து அதிகாரி, முகுல் ராய் ஆகியோருக்கும் உள்ளது. நாரதா ஸ்டிங் ஆப்பரேசனில் அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ. கண்காணிப்பு வளையத்தின் கீழ் வந்த அவர்களின் வழக்கில் முன்னேற்றம் காணப்படவில்லை.

மராட்டியத்தின் நாராயண் ரானே உள்பட இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக போர் தொடுக்கப்பட்டு உள்ளது.

ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளில் கவர்னர்களின் தலையீடு காணப்படுகிறது. தமிழகம், மராட்டியம், மேற்கு வங்காளம், பஞ்சாப், தெலுங்கானா அல்லது டெல்லி துணைநிலை கவர்னர் ஆகட்டும். பா.ஜ.க ஆளாத மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான விரிவான மோதல் போக்கிற்கு அடையாளம் ஆக அவர்கள் காணப்படுகின்றனர்.

ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் தீர்ப்பே இறுதியான ஒன்றாக உள்ளது. உங்களுடன் முரண்பட்ட கொள்கையை கொண்ட ஒரு கட்சியாக இருந்தாலும், மக்கள் அவர்களுக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளது.

நாம் ஜனநாயக நாடு என்பதில் இருந்து சர்வாதிகார போக்கிற்கு மாறி கொண்டிருக்கிறோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் 9 பேர் கையெழுத்திட்டு, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் பற்றி, சிவசேனா உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. இன்று கூறும்போது, நாடு முழுவதும் அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ. அமைப்புகளை கொண்டு மக்களை அரசு பயமுறுத்தி வருகிறது.

அல்-கொய்தா மற்றும் தலீபான்கள் தங்களது எதிரிகளை ஒழிப்பதற்காக ஆயுதங்களை எடுத்தது போன்று, அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ. அமைப்புகளை அரசு தங்களது நலன்களுக்காக பயன்படுத்தி வருகிறது என குற்றச்சாட்டாக அவர் கூறியுள்ளார்.


Next Story