சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; 3 பேர் கைது


சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; 3 பேர் கைது
x

பங்காருபேட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் 17 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கோலார் தங்கவயல்:

பங்காருபேட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் 17 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சப்-இன்ஸ்பெக்டர்

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா தேசிஹள்ளியை சேர்ந்தவர் சிவு என்ற சிவக்குமார். இவரது கூட்டாளிகள் சரத்குமார் மற்றும் ரவி. இவர்கள் 3 பேரும் பங்காருபேட்டையில் உள்ள எம்.எல்.வி. சர்க்கிளில் நேற்று முன்தினம் இரவு 9.15 மணி அளவில் தங்களது ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோருடன் சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் அவர்கள் அங்கு கும்பலாக நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியே காமசமுத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிரண்குமார் வந்தார். அவர் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்றிருந்தார். அப்போது எம்.எல்.வி. சர்க்கிளில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்து பேசிக்கொண்டிருந்த சரத்குமார் உள்ளிட்ட 3 பேரிடமும் அதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் கிரண்குமார் கேட்டு கேள்வி எழுப்பினார்.

தாக்குதல்

அதைப்பார்த்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிரண்குமார் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பது ஏன்? என்று தட்டிக்கேட்டார். அந்த சந்தர்ப்பத்தில் சிவக்குமார், சரத்குமார் மற்றும் ரவி ஆகிய 3 பேரும் ஆத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கிரண்குமாரை தாக்கினர். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் கிரண்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர் அங்கிருந்து புறப்பட்டு பங்காருபேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு போலீசாரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினார்.

3 பேர் கைது

உடனே பங்காருபேட்டை போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் சிவக்குமார் உள்ளிட்ட 3 பேரின் ஆதரவாளர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் கிரண்குமாரை தாக்கிய சிவக்குமார், சரத்குமார், ரவி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான சிவக்குமார் உள்ளிட்ட 3 பேரின் ஆதரவாளர்கள் 17 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story