இந்தியாவை தாக்கினால் கடுமையான பதிலடி கிடைக்கும்; சீனாவை தாக்கி பேசிய ராஜ்நாத் சிங்


இந்தியாவை தாக்கினால் கடுமையான பதிலடி கிடைக்கும்; சீனாவை தாக்கி பேசிய ராஜ்நாத் சிங்
x

நிலம், வான் அல்லது கடல் வழியே எவரேனும் இந்தியாவை தாக்கினால், நம்முடைய படைகள் அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் 2024-ம் ஆண்டுக்கான பாதுகாப்பு உச்சி மாநாட்டை தனியார் ஊடக அமைப்பு ஒன்று இன்று நடத்தியது. இதில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு துறையில் ஏற்பட்ட வலிமையான உருமாற்றம் பற்றி சுட்டி காட்டி பேசினார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, நிலம், வான் அல்லது கடல் வழியே எவரேனும் இந்தியாவை தாக்கினால், நம்முடைய படைகள் அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கும்.

எந்த நாட்டையும், நாம் ஒருபோதும் தாக்கியது கிடையாது. எவருடைய ஓர் அங்குல நிலத்திலும் நாம் ஆக்கிரமிப்பு செய்ததும் கிடையாது. ஆனால், எவரேனும் நம்மை நோக்கி தாக்குதலுக்காக கண் சிமிட்டினால் கூட, அதற்கு தக்க பதிலடி தர நாம் தயாராக இருக்கிறோம் என்று பேசியுள்ளார்.

கிழக்கு லடாக்கில் 2020-ம் ஆண்டு இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை பகுதியில், ராணுவ மோதல்கள் ஏற்பட்டு 4 ஆண்டுகள் ஆகின்றன. இரு நாட்டு படைகளும் பகுதியளவாக வாபஸ் பெறப்பட்டாலும் முழுமையாக வீரர்கள் திரும்ப பெறப்படவில்லை.

இந்திய எல்லை பகுதியில், ஒட்டுமொத்த படைகளும் வாபஸ் பெறப்பட வேண்டும். பதற்றம் தணிந்து, அமைதி நிலை ஏற்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கடைசியாக அக்டோபரில், இரு நாடுகளுக்கு இடையே ராணுவ மட்டத்திலான 20-வது சுற்று பேச்சுவார்த்தை சுசுல் பகுதியில் வைத்து, நடந்து முடிந்தது. எனினும், எல்லையில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்த சூழலில், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி சீனாவை தாக்கும் வகையில் நேரடியாக பேசியுள்ளார்.


Next Story