'2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சிக்கப்படும்' - பிரதமர் மோடி உறுதி
2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பை,
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐ.ஒ.சி.) 141-வது கூட்டம் மும்பையில் 3 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், 'ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் இந்தியா மிகவும் ஆர்வமாக இருக்கிறது. 2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு தேவையான எல்லா வகையிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்பது 140 கோடி இந்திய மக்களின் கனவாகும். சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் ஆதரவுடன் நாங்கள் இந்த கனவை பூர்த்தி செய்ய விரும்புகிறோம். 2029-ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டியையும் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் ஆதரவு இந்தியாவுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.
இந்த கூட்டத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேச் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் 2-வது முறையாக ஐ.ஓ.சி. கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.