ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை; குடிபோதையில் நண்பர்கள் வெறிச்செயல்
ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை செய்த நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு:
துமகூரு மாவட்டம் ஹூலியாரு துர்காவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர், பெங்களூருவில் தங்கி இருந்து ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு சவாரிக்கு சென்றுவிட்டு மெஜஸ்டிக் பகுதிக்கு சுரேஷ் வந்திருந்தார். பின்னர் மெஜஸ்டிக் அருகே பலேபேட்டையில் உள்ள சீனிவாஸ் மந்திர் பகுதியில் வைத்து நண்பர்களுடன் சேர்ந்து சுரேஷ் மதுஅருந்தியதாக தெரிகிறது. அப்போது குடிபோதையில் சுரேசுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் சுரேசை, அவரது நண்பர்கள் கண்மூடித்தனமாக கைகளால் தாக்கியதாக தெரிகிறது. அத்துடன் காலாலும் அவரை மிதித்துள்ளனர். இதில், பலத்தகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
உடனே அவரது நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். நேற்று காலை 8 மணியளவில் சுரேஷ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் உப்பார்பேட்டை போலீசார் விரைந்து வந்து சுரேஷ் உடலை கைப்பற்றி விசாரித்தனர். சுரேசை, அவரது நண்பர்களே அடித்து, மிதித்து தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. குடிபோதையில் இந்த கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுரேசின் நண்பர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.