காங்கிரசாரின் குற்றச்சாட்டுக்கு மந்திரிகள் ஆக்ரோஷமாக பேச வேண்டுமா?
காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மந்திரிகள் ஆக்ரோஷமாக பேச வேண்டுமா? என்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார்.
பெங்களூரு:
காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மந்திரிகள் ஆக்ரோஷமாக பேச வேண்டுமா? என்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார்.
மக்கள் ஆக்ரோஷம்
சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி துமகூருவில் நேற்று பா.ஜனதா கூட்டத்தில் பேசும்போது, "காங்கிரசார் அதிக ஊழல்களை செய்தனர். ஆனால் எங்கள் அரசுக்கு எதிராக ஊழல் புகார்களை அடிக்கடி கூறி பேசுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு மந்திரிகள் ஆக்ரோஷமாக பதிலளிக்கவில்லை. மந்திரிகள் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்" என்றார். இதகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் பெலகாவியில் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரசுக்கு எதிராக மக்கள் ஆக்ரோஷமாக பேசி வருகிறார்கள். மாதுசாமி சட்டசபையில் ஆக்ரோஷமாக பேசுகிறார். ஆனால் வௌியில் அவ்வாறு பேசுவது இல்லை. அவர் வெளியிலும் காங்கிரசுக்கு எதிராக உறுதியான குரலில் பேச வேண்டும். வருகிற 28-ந் தேதி உள்துறை மந்திரி அமித்ஷா உப்பள்ளி, தார்வாருக்கு வருகிறார். அவர் கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
டெண்டர் விடப்படும்
கோவா சட்டசபையில் மகதாயி விவகாரத்தில் மத்திய அரசு கலசா-பண்டூரி திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு எந்த மதிப்பும் கிடையாது. நடுவர் மன்ற தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு இணையானது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் சட்டப்பூர்வமாக பணியாற்றி வருகிறோம்.
கலசா-பண்டூரி திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. அதற்கு வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி கிடைத்ததும், டெண்டர் விடப்படும். காங்கிரஸ் கட்சி அதிக பொய்களை பேசுகிறது. அக்கட்சி தலைவர்கள் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். அது நமது அரசியல் கலாசாரம் இல்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.