இடர்பாட்டு சூத்திரத்தை தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்; கர்நாடக அரசுக்கு, பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்


இடர்பாட்டு சூத்திரத்தை தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்; கர்நாடக அரசுக்கு, பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்
x

காவிரி விவகாரத்தில் அனைவரின் கருத்தையும் கேட்டு இடர்பாட்டு சூத்திரத்தை தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

மண்டியா:

காவிரி விவகாரத்தில் அனைவரின் கருத்தையும் கேட்டு இடர்பாட்டு சூத்திரத்தை தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மண்டியாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இடர்பாட்டு சூத்திரம்

காவிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார். இதன் மூலம் மக்களை திசை திருப்புகிறார். அவர் ஏன் இவ்வளவு மோசமாக பேசுகிறார் என்று தெரியவில்லை. பெங்களூருவுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான பெங்களூரு என்ற பெயர் தான் கிடைக்கும். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இடர்பாட்டு சூத்திரத்தை வகுக்க வேண்டிய சூழ்நிலை எழவில்லை. ஆனால் தற்போது இடர்பாட்டு சூத்திரத்தை கொண்டு வருவது அவசியம். மாநில அரசு, சட்ட நிபுணர்கள், போராட்டக்காரர்கள், எதிர்க்கட்சியினர் என அனைவரும் ஏற்கக்கூடிய இடர்பாட்டு சூத்திரத்தை தயாரிக்க வேண்டும். இதை சுப்ரீம் கோர்ட்டு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம்.

உபரிநீர் கடலில் கலக்கிறது

மண்டியா மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் கர்நாடக மக்கள், குறிப்பாக பெங்களூரு நகர மக்கள் உள்ளனர். தமிழகத்திற்கு 2 பருவமழை காலம் உள்ளது. அவர்களுக்கு தண்ணீர் பிரச்சினை இல்லை. நாம் நீரை பாதுகாத்துக்கொள்ள 4 அணைகளை கட்டியுள்ளோம். உபரி நீரை பயன்படுத்த தமிழகம் எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. அதனால் உபரி நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது.

கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை கட்டியபோது அதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது தமிழகத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் தான் நமக்கு பிரச்சினையாக உள்ளது.

திறக்க முடியாது

கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு 12 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீரை தமிழகத்திற்கு திறக்கும்படி உத்தரவிட்டது. அப்போது நான் நீர் திறக்க முடியாது என்று கூறினேன். வக்கீல்கள் கூறியும் நான் கேட்கவில்லை. வேறு வக்கீல்களை நியமித்து தண்ணீர் திறக்க இயலாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story