4-வது மாடியில் இருந்து 5 வயது மகளை தூக்கி வீசிய கொடூர தாய்
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 4-வது மாடியில் இருந்து தனது 5 வயது மகளை தாய் ஒருவர் கொடூரமாக தூக்கி வீசியுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 4-வது மாடியில் இருந்து தனது 5 வயது மகளை தாய் ஒருவர் கொடூரமாக தூக்கி வீசியுள்ளார். குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பின்னர் தானும் தற்கொலை செய்வது போல் நடித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சம்பாங்கி ராமா நகரில் நேற்று நடந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் அந்த தாயை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளில் தாய் குழந்தையுடன் 4-வது மாடியின் நடைபாதையில் நடந்து செல்வதை காண முடிகிறது. அங்கிருந்து குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.
பின்னர் தானும் தற்கொலை செய்வது போல் குதிக்க முயன்றுள்ளார். அதற்குள் அருகில் இருந்தவர்கள் அவரை இழுத்து தற்கொலை செய்ய விடாமல் தடுத்தனர். குழந்தை மாற்றுத்திறனாளி என்றும், தாய் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.
இது குறித்து மத்திய துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீனிவாஸ் கவுடா கூறுகையில், "குழந்தையை தாய் வேண்டுமென்றே பால்கனியில் இருந்து வீசியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நாங்கள் கைது செய்துள்ளோம் என்று கூறினார்.