கன்னியாகுமரி-சியாச்சின் வரை மாற்று திறனாளிகள் நலனுக்கான யாத்திரையில் பீகார் வாலிபர்


கன்னியாகுமரி-சியாச்சின் வரை மாற்று திறனாளிகள் நலனுக்கான யாத்திரையில் பீகார் வாலிபர்
x

எங்களது தேவைகளை பூர்த்தி செய்வதன் வழியே ஒரு புதிய இந்தியா உருவாக்கப்படும் என மாற்று திறனாளி வாலிபர் ஹசன் கூறியுள்ளார்.



கோழிக்கோடு,


பீகாரை சேர்ந்த வாலிபர் ஹசன் இமாம் (வயது 25). மாற்று திறனாளியான இவர், சக்கர நாற்காலி ஒன்றில் அமர்ந்தபடி கன்னியாகுமரியில் இருந்து லடாக்கில் உள்ள சியாச்சின் வரை யாத்திரை மேற்கொள்கிறார்.

அவர் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு வரையிலான 500 கி.மீ. தொலைவை சக்கர நாற்காலி வழியே கடந்து சென்று அடைந்துள்ளார். பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு மாற்றம் கொண்டு வரவேண்டும் என அவர் திட்டமிட்டு உள்ளார்.

உலகில் மாற்று திறனாளிகள் உள்பட அனைவரும் பயன்பெறும் வகையிலான நலன்களுக்காக பிரசாரம் மேற்கொள்ளும் அவர், ஜவகர்லால் பல்கலை கழகத்தில் ரஷிய பட்டப்படிப்பை படித்து முடித்து இருக்கிறார்.

ஹசன் தனது யாத்திரை பற்றி கூறும்போது, நாட்டில் 10 லட்சம் மாற்று திறனாளிகள் உள்ளனர் என பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் பொது இடங்களில் எங்களுக்கான வசதிகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அமல்படுத்த கோரி இந்த யாத்திரையை மேற்கொள்கிறேன். படிகள் இருக்கின்ற பகுதிகளில் சக்கர நாற்காலி உதவியுடன் நாங்களும் செல்லும் வகையில், சாய்தள பாதை அமைக்கப்பட வேண்டும்.

எந்த நிகழ்ச்சியிலும் இதுபோன்ற சாய்தள பாதை இல்லை என்பதற்காக மாற்று திறனாளி நபர் வீட்டில் அமர்ந்து இருக்க வேண்டும் என்பது மிக மோசம்.

திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களிலும் எங்களுக்கு பயன் தரும் வகையிலான விசயங்கள் இல்லை. கேரளா ஆகட்டும் அல்லது வேறு எந்த மாநிலம் ஆகட்டும், எங்களை போன்ற நபர்களின் பயனுக்கு ஏற்றவாறு பொது போக்குவரத்து துறை இல்லை என அவர் கூறியுள்ளார்.

சென்னை மெரீனா பீச் ஒன்றிலேயே மாற்று திறனாளிகள் உபயோகப்படுத்த கூடிய சாய்தள பாதைகள் காணப்படுகின்றன. இந்தியாவில் வேறு எந்த பீச்சிலும் இதுபோன்று இல்லை. எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதன் வழியே ஒரு புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story