கர்நாடக சட்டசபை தேர்தல்: 125 தொகுதிகளுக்கு பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் தயார்


கர்நாடக சட்டசபை தேர்தல்: 125 தொகுதிகளுக்கு பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் தயார்
x

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 125 தொகுதிகளுக்கான பா.ஜனதாவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 125 தொகுதிகளுக்கான பா.ஜனதாவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2-வது நாளாக ஆலோசனை

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 124 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2-வது கட்டமாக 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, 2-வது நாளாக நேற்றும் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

125 தொகுதிகளுக்கான பட்டியல்

அப்போது பிரச்சினையாக இருக்கும் 60 தொகுதிகளுக்கும், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்கும் 2 முக்கிய பிரமுகர்களின் பட்டியலை மட்டும் தேர்தல் குழுவுக்கு அனுப்பி வைக்கும்படி மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையாவுக்கு ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த 2 பேரில் ஒருவரை தேர்வு செய்து கூடிய விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட காங்கிஸ் தயாராகி வருகிறது.

அதே நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பில் பா.ஜனதாவும் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பெங்களூரு புறநகரில் உள்ள ஓட்டலில் பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 125 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கர்நாடக தலைவர்கள் தயார் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

3 பெயர்கள் சிபாரிசு

அந்த 125 தொகுதிகளுக்கான பட்டியலை பா.ஜனதாவின் மத்திய தேர்தல் குழுவுக்கு அனுப்பி வைக்க உள்ளனர். அதனை மேலிட தலைவர்கள் பரிசீலித்துவிட்டு, வருகிற 8 அல்லது 9-ந் தேதி 125 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பிரச்சினைகள் இருக்கும் தொகுதிகளுக்கு 3 பிரமுகர்களின் பெயர்களை மேலிடத்திற்கு சிபாரிசு செய்யும்படியும் கர்நாடக தலைவர்களுக்கு, மேலிடம் உத்தவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரில் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க பா.ஜனதா தீர்மானித்துள்ளததாக தெரிகிறது.


Next Story