பொது சிவில் சட்டம் கொண்டுவர பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது - அமித்ஷா தகவல்


பொது சிவில் சட்டம் கொண்டுவர பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது - அமித்ஷா தகவல்
x

கோப்புப்படம்

பொது சிவில் சட்டம் கொண்டுவர பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது என்று அமித்ஷா கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில், ஒரு ஆங்கில செய்தி சேனலின் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்பது ஜனசங்க காலத்தில் இருந்து மக்களுக்கு பா.ஜனதா அளித்து வரும் வாக்குறுதி ஆகும். பொது சிவில் சட்டம் கொண்டுவர பா.ஜனதா உறுதி பூண்டுள்ளது.

ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதம் நடத்துவது அவசியம். இப்பிரச்சினை குறித்து, வெளிப்படையான, ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும். அந்த விவாதம் முடிந்த பிறகு அச்சட்டத்தை கொண்டு வருவோம்.

மதத்துக்கு ஏற்ப சட்டம்

பா.ஜனதா ஆட்சி நடக்கும் உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள், பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி ஆராய ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்துள்ளன. அக்குழுக்கள் அளிக்கும் சிபாரிசுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது சிவில் சட்டத்தை பா.ஜனதா மட்டும் ஆதரிக்கவில்லை. அதை உரிய நேரத்தில் கொண்டு வருமாறு நாடாளுமன்றத்துக்கும், மாநிலங்களுக்கும் அரசியல் நிர்ணய சபை அறிவுரை கூறியுள்ளது. அதை எல்லோரும் மறந்து விட்டனர்.

நாடும், மாநிலங்களும் மதச்சார்பற்றதாக இருக்கும்போது, ஒவ்வொரு மதத்துக்கு ஏற்ப வெவ்வேறு சட்டங்கள் எப்படி இருக்க முடியும்? ஒவ்வொரு மதத்தினருக்கும் நாடாளுமன்றமோ, சட்டசபைகளோ நிறைவேற்றிய ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும்.

காஷ்மீர்

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை எனது தனிப்பட்ட வெற்றியாக பார்க்கவில்லை. மோடி மந்திரிசபையில் நான் ஒரு மந்திரி. ஒவ்வொரு வெற்றியும் அரசின் வெற்றி. 370-வது பிரிவு இருப்பதால்தான், இந்தியாவுடன் காஷ்மீர் ஒட்டிக்கொண்டுள்ளது என்று பிரசாரம் செய்தார்கள். ஆனால், அந்த பிரிவு நீங்கிய பிறகும், காஷ்மீர் இந்தியாவுடன்தான் உள்ளது.

காஷ்மீரில் 30 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் அடிமட்டத்தில் ஜனநாயகம் வேரூன்றி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். ரூ.56 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது.

மிகக்குறைவான பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. கல்வீச்சு சம்பவம் இல்லை. இவையெல்லாம் அரசின் சாதனைகள்.

ஆம் ஆத்மி மந்திரி

சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் சோதனைகளை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. யாருக்காவது குறை இருந்தால், கோர்ட்டை அணுகலாம்.

திகார் சிறையில் டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு சலுகைகள் அளிக்கப்படுவது பற்றிய வீடியோ உண்மையானதா என்பதை ஆம் ஆத்மிதான் சொல்ல வேண்டும். நான் சிறை சென்றபோது, மந்திரி பதவியை ராஜினாமா செய்தேன். ஆனால், சிறைக்கு போனபிறகும் மந்திரி பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது வெட்கக்கேடு.

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் போட்டி. தொகுதி எண்ணிக்கை மற்றும் ஓட்டு சதவீதத்தில் முந்தைய சாதனைகளை முறியடிப்போம் என்று அவர் கூறினார்.


Next Story