பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் அணி மாநாடு கலபுரகியில் நாளை நடக்கிறது
பா.ஜனதாவின் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநாடு கலபுரகியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதாக மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:
பா.ஜனதாவின் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநாடு கலபுரகியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதாக மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் கூறியுள்ளார்.
மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அரசியல் சாசன அங்கீகாரம்
கர்நாடக பா.ஜனதாவினர் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநாடு 30-ந் தேதி (நாளை) கலபுரகியில் நடைபெற உள்ளது. இதில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணி தேசிய தலைவர் லட்சுமண் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் பா.ஜனதா தொண்டர்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
அடுத்த 2 மாதங்களில் கட்சியின் பல்வேறு பிரிவுகளின் மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். மத்திய-மாநில பா.ஜனதா அரசுகள் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. பிற்படுத்தப்பட்ட சாதிகள் ஆணையத்திற்கு மத்திய அரசு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ரூ.250 கோடி நிதி
கர்நாடகத்தில் பின்தங்கிய சமூகங்களின் மேம்பாட்டிக்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் சிறிய சிறிய சமூகங்களையும் அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டிற்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும். சித்தராமையாவை பின்தங்கிய சமூகங்களின் குரல் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது அந்த சமூகங்களின் மக்களின் மேம்பாட்டிற்கு எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை.
இவ்வாறு சுனில்குமார் கூறினார்.