மராட்டியத்தில் அரசியல் சாசனத்தை பா.ஜனதா அவமதிக்கிறது; குமாரசாமி பேட்டி
மராட்டியத்தில் பா.ஜனதா செய்வது அரசியல் சாசனத்திற்கு அவமானம் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:
ஜனதா தளம் (எஸ்) தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஆட்சி அதிகார தாகம்
மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை ஆபரேஷன் தாமரை மூலம் கட்சி தாவ வைத்துள்ளனர். இதன் மூலம் பா.ஜனதாவின் ஆட்சி அதிகார தாகம் மிகவும் மோசமாக உள்ளது. இனி ஒரு கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தாலும் அந்த ஆட்சியை தக்க வைப்பது சந்தேகம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை உத்தவ் தாக்கரே இழந்துவிட்டதாக சொல்கிறார்கள்.
ஆனால் அதன் பின்னணியில் பா.ஜனதா இருக்கிறது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோதும் இதே நிலை தான் ஏற்பட்டது. எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை நான் இழந்துவிட்டதாக கூறினர். ஆனால் நான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளின் வளர்ச்சிக்கு ரூ.19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினேன். ஆனாலும் எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்த்தனர்.
அரசியல் சாசனத்திற்கு அவமானம்
மராட்டியத்தில் பா.ஜனதா செய்வது அரசியல் சாசனத்திற்கு செய்யும் அவமானம். இந்த நடைமுறையை அக்கட்சி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் விஸ்தரிக்கிறது. அரசியல் சாசனத்தை காக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வளவு நல்லாட்சியை நடத்தினாலும் அதற்கு மதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.சீனிவாஸ் மற்றும் சீனிவாசகவுடாவை நீக்கிய முடிவு ஒருங்கிணைப்பு குழுவில் எடுக்கப்பட்டது.
அவர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு கோர்ட்டுக்கு செல்வதாலோ அல்லது சபாநாயகரிடம் முறையிடுவதாலோ எதுவும் நடந்துவிடாது.தற்போது உள்ள கட்சி தாவல் தடை சட்டத்தால் வெற்றி பெற முடியாது. முதலில் இந்த கட்சி மாறும் நிலை மாற வேண்டும். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தை பலப்படுத்துவோம்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.