ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை ஒழித்துக்கட்ட பா.ஜனதா சதி-டி.கே.சிவக்குமார் பேட்டி
ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை ஒழித்துக்கட்ட பா.ஜனதா சதி செய்வதாக டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அமைதி போராட்டத்திற்கு பிறகு மாநில காங்கிரஸ் தலைவரான துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒழித்துக்கட்ட சதி
நாட்டில் கடந்த 9 ஆண்டுகளாக நேரு குடும்பத்தின் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவினர் அவர்களுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை கூறி வருகிறார்கள். அவர்களின் அவதூறு பேச்சுகளுக்கு இதுவரை எந்த தண்டனையும் கிடைக்கவில்லை. ஆனால் ராகுல் காந்தி கோலாரில் பேசிய பேச்சை வைத்து அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்துள்ளனர்.
அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்து கொண்டு, ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை ஒழித்துக்கட்ட பா.ஜனதாவினர் சதி செய்கிறார்கள். ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு ராகுல் காந்திக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதை சகித்துக்கொள்ள முடியாமல் இத்தகைய சதியை செய்கிறார்கள்.
சகித்துக்கொள்ள முடியவில்லை
கா்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பே இதற்கு சாட்சி. கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை நடைபெற்ற பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதை பா.ஜனதாவினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ராகுல் காந்திக்கு ஆதரவாக நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். ராகுல் காந்தி ஏழைகள், தொழிலாளர்கள், வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். அவருக்கு ஆதரவாக கா்நாடக மக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியை காந்தி குடும்பத்தால் மட்டுமே ஒற்றுமையாக வைத்திருக்க முடியும். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.