'இமாசல பிரதேச மக்களின் உரிமையை பா.ஜ.க. நசுக்க நினைக்கிறது' - பிரியங்கா காந்தி


இமாசல பிரதேச மக்களின் உரிமையை பா.ஜ.க. நசுக்க நினைக்கிறது - பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 28 Feb 2024 11:36 AM GMT (Updated: 28 Feb 2024 12:35 PM GMT)

மத்திய அரசின் அதிகாரத்தை பா.ஜ.க. தவறாக பயன்படுத்துகிறது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 25 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியும், 3 சுயேச்சைகள் வாக்களித்ததாலும் பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் மெஜாரிட்டியை இழந்தது என பா.ஜ.க. கூறியது.

இதனிடையே இமாசல பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து முதல்-மந்திரி பதவியை சுக்விந்தர் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் சுக்விந்தர் சிங் இதனை மறுத்துள்ளார். இந்த தொடர் திருப்பங்களால் இமாசல பிரதேசத்தில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் 'இமாசல பிரதேச மக்களின் உரிமையை பா.ஜ.க. நசுக்க நினைக்கிறது' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் தாங்கள் விரும்பும் அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது. இமாசல பிரதேச மக்கள் இந்த உரிமையை பயன்படுத்தி அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் அரசை தேர்ந்தெடுத்தனர்.

ஆனால் பணபலம், ஏஜென்சிகளின் பலம் மற்றும் மத்திய அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இமாசல பிரதேச மக்களின் இந்த உரிமையை பா.ஜ.க. நசுக்க நினைக்கிறது. இதற்காக பாதுகாப்பு மற்றும் அரசு இயந்திரங்களை, நாட்டின் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் பா.ஜ.க. அரசு பயன்படுத்துகிறது.

25 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட கட்சி 43 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பெரும்பான்மைக்கு சவால் விடுகிறது என்றால், அது எம்.எல்.ஏ.க்களின் குதிரை பேரத்தை நம்பியிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

அவர்களின் இந்த அணுகுமுறை நெறிமுறையற்றது, அரசியலமைப்பிற்கு எதிரானது. இமாசல பிரதேச மக்களும், நாட்டு மக்களும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இயற்கை பேரிடரின் போது மாநில மக்களுடன் நிற்காத பா.ஜ.க., தற்போது மாநிலத்தை அரசியல் பேரழிவில் தள்ள நினைக்கிறது."

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.


Next Story