கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனித்துப்போட்டி


கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனித்துப்போட்டி
x

ஜனதாதளம் (எஸ்) உள்ளிட்ட எந்த கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றும், கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிடும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

ஜனதாதளம் (எஸ்) உள்ளிட்ட எந்த கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றும், கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிடும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அமித்ஷா சுற்றுப்பயணம்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்துள்ளார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருப்பதால், கர்நாடகத்தில் கட்சியை பலப்படுத்துவது மற்றும் பழைய மைசூரு பகுதிகளில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக அமித்ஷா வியூகம் அமைந்துள்ளார். இதற்காக மண்டியாவில் நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றிருந்தது. ஜனதாதளம் (எஸ்) கட்சியின் கோட்டையாக விளங்கும் மண்டியாவில் 5 தொகுதிகளில் வெற்றி பெற அமித்ஷா இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இந்த நிலையில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் பா.ஜனதா கட்சியின் பூத் மட்டத்திலான விஜய சங்கல்ப நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்து பேசியதாவது:-

பா.ஜனதா தனித்து போட்டி

ஜனதாதளம் (எஸ்) கட்சியும், காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரண்டு முகங்கள் ஆகும். குடும்ப அரசியல், ஊழலுக்கு எதிராக மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும். கர்நாடகத்தில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். ஜனதாதளம் (எஸ்) கட்சியை நாம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டாம்.

ஜனதாதளம் (எஸ்) உள்ளிட்ட எந்த கட்சிகளுடனும் பா.ஜனதா கூட்டணி வைத்து கொள்ளாது. பா.ஜனதா தனித்து போட்டியிடும். தனித்து போட்டியிட்டு தனிப்பெரும்பான்மை பலத்துடன் நாம் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். தேசபக்தர்களுடன் நிற்க வேண்டுமா?, தேசத்தை கொள்ளையடிப்பவர்களுடன் கைகோர்க்க வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

திப்பு சுல்தானை ஹீேராவாக்க முயற்சி

பி.எப்.ஐ. ஆதரவாளர்களுடன் சேர வேண்டுமா?, இல்லை, நாட்டை காப்பாற்றும், ராமமந்திர் கட்டும் கட்சி யுடன் சேர வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

திப்பு சுல்தானை ஹீரோவாக்க முயற்சிப்பவர்களை தள்ளி வையுங்கள். பெங்களூருவில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் மூலமாக போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பெங்களூரு-விமான நிலையத்தை இணைப்பதற்காக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

எடியூரப்பா-பசவராஜ் பொம்மை ஜோடி பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக ரூ.2 லட்சம் கோடியை கொடுத்திருக்கிறார்கள். பெங்களூரு புதிய தொழில் தொடங்குவதற்கு தகுதியான நகரமாகி உள்ளது. இங்கு முதலீடு செய்ய முதலிட்டாளர்கள் விரும்புகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டை பாதுகாக்க உழைத்து வருகிறார்.

எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை

சித்தராமையா, டி.கே.சிவக்குமார், குமாரசாமி ஓட்டு வங்கிக்காக பி.எப்.ஐ. அமைப்பை ஆதரிக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்புக்காகவும், கர்நாடகத்தில் சமமான வளர்ச்சி அடையவும் பா.ஜனதாவை மக்கள் ஆதரிக்க வேண்டும். குஜராத் உள்பட 7 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 5 மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

குஜராத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரசுக்கு கிடைக்கவில்லை. மத்திய, மாநில பா.ஜனதா அரசுகளின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்த சாதனைகள் மூலமாகவே சட்டசபை தேர்தல் எதிர்கொள்ளப்படும். காங்கிரஸ் கட்சியின் சாதனை ஊழல் மட்டுமே.

தனிப்பெரும்பான்மை பலத்துடன்...

காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது எதிராளியாக இருந்தார்கள். தேர்தல் முடிந்ததும் பா.ஜனதாவை எதிர்க்க ஜனதாதளம் (எஸ்) கட்சியும், காங்கிரசும் ஒன்றாக சேர்ந்து விட்டார்கள். ஊழலால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைந்தது. வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.


Next Story