லஞ்சம் வாங்கிவிட்டு காரில் தப்ப முயன்ற அரசு அதிகாரி கைது
பெங்களூரு அருகே லஞ்சம் வாங்கிவிட்டு காரில் தப்ப முயன்ற அரசு அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் 15 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு அருகே லஞ்சம் வாங்கிவிட்டு காரில் தப்ப முயன்ற அரசு அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் 15 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
ரூ.1 லட்சம் லஞ்சம்
பெங்களூரு புறநகர் நெலமங்களா டவுன் பகுதியில் உணவுத்துறை ஆய்வாளராக இருப்பவர் மகாந்த் கவுடா. அந்த பகுதியில் கடை நடத்தி வரும் ரங்கதாமையா என்பவர், தனது கடைக்கு வியாபார உரிமம் பெறுவதற்காக, மகாந்த் கவுடாவை சந்தித்து பேசினார். அப்போது வியாபாரம் செய்வதற்கு உரிமம் வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என மகாந்த் கவுடா கேட்டு உள்ளார். அதன்படி முதல்கட்டமாக ரூ.12 ஆயிரத்தை ரங்கதாமையா லஞ்சமாக வழங்கினார்.
எனினும் மகாந்த் கவுடா வியாபாரத்துக்கான உரிமத்தை வழங்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து ரங்கதாமையா, மீண்டும் அவரை சந்தித்து பேசினார். அப்போது மேலும் ரூ.43 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மகாந்த் கவுடா கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரங்கதாமையா, இதுகுறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லோக் அயுக்தா போலீசார், வியாபாரியை அழைத்து அறிவுரை கூறினர்.
15 கிலோ மீட்டர் தூரம்
அந்த அறிவுரையின்பேரில் ரங்கதாமையா, அதிகாரி மகாந்த் கவுடாவை சந்தித்து அவரது அலுவலகம் அருகே வைத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.43 ஆயிரத்தை கொடுத்தார். அந்த பணத்தை மகாந்த் கவுடா வாங்கினார். அந்த சமயத்தில் அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ந்து போன மகாந்த் கவுடா, தனது காரில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றார்.
எனினும் லோக் அயுக்தா போலீசார் அவரை விடாமல் பின்தொடர்ந்து காரில் துரத்தி சென்றனர். சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் லோக் அயுக்தா போலீசார், மகாந்த் கவுடாவை துரத்தி சென்றனர். இதையடுத்து சொன்டேகுப்பா பகுதியில் வைத்து அவரை காருடன் லோக் அயுக்தா போலீசார் மடக்கினர்.
இதையடுத்து லோக் அயுக்தா போலீசார் மகாந்த் கவுடாவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். முன்னதாக மகாந்த் கவுடாவை கைது செய்ய முயன்றபோது லோக் அயுக்தா போலீசார் மீது காரை ஏற்ற முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட லோக் அயுக்தா போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை முயற்சி வழக்கு
இந்த சம்பவம் குறித்து நெலமங்களா போலீசில் லோக் அயுக்தா போலீசார் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மகாந்த் கவுடா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.