திருமண நாளில் மணமகனின் சகோதரரை கரம்பிடித்த மணமகள்...


திருமண நாளில் மணமகனின் சகோதரரை கரம்பிடித்த மணமகள்...
x

உத்தர பிரதேசத்தில் திருமண நாளில் மணமகனின் இளைய சகோதரரை மணமகள் திருமணம் செய்தது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.



லக்னோ,


உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் அரியானா கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் சைதங்காலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், தவாய் குர்த் கிராமத்தின் அஸ்மோலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவாகி இருந்தது.

திருமண நாளன்று, மணமகள் வீட்டுக்கு மணமகன் தனது உறவினர்கள் சூழ வந்துள்ளார். அவர்களை மணமகள் வீட்டார் சிறப்பாக வரவேற்றனர். நிக்கா நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

இந்த நிலையில், அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. மணமகனின் முதல் மனைவி, குழந்தைகளுடன் மணமகள் கிராமத்திற்கு வந்து உள்ளார். போலீசாரும் தகவல் அறிந்து வந்து சேர்ந்தனர்.

அந்த பெண், தன்னிடம் எதுவும் தெரிவிக்காமல் 2-வது திருமணம் செய்துள்ளார் என கணவர் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார். தங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர் என கூறியுள்ளார்.

இதனால், திருமண வீடு கலவர பகுதியானது. இதன்பின்னர், போலீசார் இரு தரப்பினைரையும் அஸ்மோலி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து மூத்த பஞ்சாயத்து தலைவர்கள் சிலர் காவல் நிலையத்திற்கு சென்று பரஸ்பர ஒப்புதலுக்காக பேச்சுவார்த்தை நடத்தி, முடிவு செய்தனர். இதன்படி, 2-வது திருமணம் செய்த மனைவியை மணமகன் விவாகரத்து செய்ய வேண்டும்.

அந்த மணமகள், மணமகனின் இளைய சகோதரரை திருமணம் செய்ய வேண்டும் என முடிவானது. இதனை தொடர்ந்து, மணமகனின் இளைய சகோதரரை மணமகள் கரம்பிடித்து அவருடன் சென்றார். இது மணமகன் கிராமத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story