பெங்களூருவில் எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்


பெங்களூருவில் எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
x

பெங்களூருவில் ஏழை, பணக்காரர்கள் என்ற எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று வருவாய்த்துறை மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் ஏழை, பணக்காரர்கள் என்ற எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று வருவாய்த்துறை மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று வருவாய்த்துறை மந்திரி அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

30 கம்ப்யூட்டர் நிறுவனங்கள்

பெங்களூருவில் ராஜகால்வாய் நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்ததால், சமீபத்தில் பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. பெங்களூருவில் மழை பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு பணிகளை அரசு தொடங்கி உள்ளது.

பெங்களூருவில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்புகள் உள்ளதோ, அதுபற்றிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை மாநகராட்சியிடம் வருவாய்த்துறை வழங்கி இருக்கிறது. பெங்களூருவில் உள்ள 30 கம்ப்யூட்டர் நிறுவனங்களும் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதுபோன்று ஆக்கிரமிப்புகள் செய்துவிட்டு, மழை பாதிப்பு குறித்து கம்ப்யூட்டர் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பெரிய அளவில் பேசி வருகின்றனர்.

பாரபட்சம் இல்லாமல் அகற்றப்படும்

ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரத்தில் எந்த விதமான பாரபட்சமும், பாகுபாடும் பார்க்கப்பட மாட்டாது. ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்படும். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெங்களூருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெறும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ராஜ கால்வாய்கள் மீட்கப்பட்டு மழை பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு மந்திரி அசோக் கூறினார்.


Next Story