உழைக்கும் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ்


உழைக்கும் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ்
x

கர்நாடகத்தில் உழைக்கும் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் உழைக்கும் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

அதிநவீன சொகுசு பஸ்

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்(கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் அம்பாரி, ராஜஹம்ச போன்ற நவீன வசதிகள் கொண்ட சொகுசு பஸ்கள் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கழகம் சார்பில் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட 'அம்பாரி உத்சவ' என்ற பெயரில் புதிய பஸ்களின் சேவை தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, 15 அம்பாரி உத்சவ பஸ்களின் சேவையை தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு அவர் பேசியதாவது:-

கர்நாடகத்தில் உழைக்கும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்துள்ளேன். இந்த திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தொடங்கப்படும். இதன் மூலம் உழைக்கும் பெண்களுக்கு உரிய மரியாதை மற்றும் பொருளாதார ரீதியாக பலம் கிடைக்கும். மினி பள்ளி பஸ்களை அறிமுகம் செய்ய வேண்டும்.

அரசு முன்னுரிமை

தற்போது உள்ள பஸ்களை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். ஒவ்வொரு தாலுகாவிலும் குறைந்தது 5 பஸ்கள் மாணவர்களுக்கு என்றே இயக்கப்படும். பள்ளி நேரங்களில் இந்த பஸ்களின் போக்குவரத்து நடைபெறும். தேவைப்பட்டால் இந்த திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து துறையின் பங்கு மிக முக்கியமானது.

அதற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் உழைக்கும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள பஸ்களில் படுக்கை வசதி உள்ளது. ரெயில்களில் உள்ளது போல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முன்பு சொகுசு பஸ்களில் போதுமான வசதிகள் இருக்கவில்லை.

தரமான சேவை

இத்தகைய பஸ்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் வாங்கலாம். கே.எஸ்.ஆர்.டி.சி. பொதுமக்களுக்கு நல்ல தரமான சேவையை வழங்கி வருகிறது. கிராமப்புற மக்கள் அரசு பஸ்களில் தான் பயணம் செய்கிறார்கள். நான் கல்லூரியில் படிக்கும்போது அரசு பஸ்சை தான் பயன்படுத்தினேன். அரசு பஸ்கள் லாபகரமாக இயங்க வேண்டும். அதற்கு ஊழியர்கள் நேர்மையான முறையில் உழைக்க வேண்டும்.

வரும் நாட்களில் இந்த போக்குவரத்து கழகத்தில் பெரிய மாற்றங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. போக்குவரத்து கழகங்கள் சொந்த பலத்தில் செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம். கொரோனா நெருக்கடி காலத்தில் போக்குவரத்து கழகங்கள் கடும் நெருக்கடியை சந்தித்தன. அந்த நேரத்தில் அவற்றுக்கு தேவையான நிதி உதவிகளை அரசு செய்தது.

வரி விலக்கு

இந்த போக்குவரத்து கழகங்களுக்கு அரசு ரூ.4,600 கோடி வழங்கியது. இந்த கழகங்களுக்கு வரி விலக்கு அளிக்கவும் அரசு தயாராக உள்ளது. ஆனால் போக்குவரத்து கழகங்கள் வருவாயை பெருக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். பஸ்களின் உதிரி பாகங்கள், டயர், எரிபொருள் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.

போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்கிறார்கள். இதுகுறித்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும். தனியாருடன் போட்டி போடும் அளவுக்கு பஸ் சேவைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

குளிர்சாதன வசதி

புதிதாக சேவையை தொடங்கி உள்ள 'அம்பாரி உத்சவ' பஸ்கள் பி.எஸ்.-6 9600 மல்டி ஆக்சில் படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதி கொண்டவை ஆகும். இந்த 'அம்பாரி உத்சவ' பெயர் பொதுமக்களிடம் இருந்து பரிசு போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்ட பெயர் ஆகும்.

இந்த அதிநவீன சொகுசு பஸ்கள் குந்தாப்புரா-பெங்களூரு, மங்களூரு-புனே, பெங்களூரு-செகந்திராபாத், பெங்களூரு-ஐதராபாத், பெங்களூரு-எர்ணாகுளம், பெங்களூரு-திருவனந்தபுரம், பெங்களூரு-திருச்சி, பெங்களூரு-பனாஜி ஆகிய நகரங்கள் இடையே இயக்கப்படுகின்றன.

எரிபொருள் சேமிக்கும்

இந்த பஸ்கள் 15 மீட்டர் நீளம் கொண்டவை. அதில் 40 படுக்கைகள் உள்ளன. அமர்ந்து கொண்டு பயணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. பஸ்சின் முன்பக்க தோற்றம் எரிபொருள் சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர இன்னும் பல்வேறு வகையான வசதிகளும் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் என்.வி.பிரசாத், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சீனிவாசமூர்த்தி, கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் அன்புக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story