விஐபி தரிசனம் ரத்து- திருப்பதியில் விரைந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்
அதிக அளவில் கூட்டம் இருந்தாலும் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகள் பக்தர்கள் நிரம்பி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை தரிசனத்திற்காக காத்துக் கிடக்கின்றனர். பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்தவதற்காக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. சிபாரிசு கடித தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் தரிசன நேரம் பாதியாக குறைந்துள்ளது. இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் 18 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர். அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் குவிந்து இருந்தாலும் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இன்று ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 3 மணி நேரத்திலும், இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 81,833 பேர் தரிசனம் செய்தனர். 33,860 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.