121 பேரின் உயிரை பறித்த ஹத்ராஸ் சம்பவம்: எஸ்.ஐ.டி அறிக்கையில் பரபரப்பு தகவல்


121 பேரின் உயிரை பறித்த  ஹத்ராஸ் சம்பவம்
x

சிறப்பு விசாரணைக்குழு 855 பக்கங்களைக்கொண்ட அறிக்கையை உத்தரபிரதேச அரசிடம் சமர்ப்பித்தது.

லக்னோ,

உ.பி.,யின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் கடந்த 2ம் தேதி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. சுராஜ்பால் என்கிற போலே பாபா என்பவர் இந்த சொற்ப்பொழிவில் பங்கேற்று பேசினார். இதில்,80 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், 2.50 லட்சம் பேர் திரண்டனர். போலே பாபா சாமியார் புறப்படும் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி அடிபட்டும், மிதிபட்டும், மூச்சு திணறியும் 121 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்தது.

ஏடிஜிபி அனுபம் குல்ஷ்ரேஷ்தா மற்றும் அலிகார்க் கமிஷனர் சைத்ரா ஆகியோர் தலைமையிலான குழுவினர், 128 சாட்சிகள், சொற்பொழிவு நிகழ்ச்சியில் பணியில் இருந்த போலீசார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குமூலம் பெற்று 855 பக்கங்களை கொண்ட அறிக்கையை தயாரித்து மாநில அரசிடம் தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில் , ஹத்ராஸ் சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளதை மறுக்க முடியாது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். கூட்ட நெரிசலுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு. உள்ளூர் நிர்வாகம், போலீசார் இந்நிகழ்ச்சியை சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். விசாரணைக்கு சென்ற காவல்துறையினரை அனுமதிக்காமல் தடுத்துள்ளனர். நிகழ்ச்சி நடந்தபோது பொதுமக்கள் வெளியேறுவதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

நிகழ்சி நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்யாமலேயே அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் சாமியார் போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை. இந்த அறிக்கை குறித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story