'ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. எந்த எல்லை வரை செல்லும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை' - ராகுல் காந்தி
காந்தியின் கொள்கைகளையும், அரசியலமைப்பின் மாண்புகளையும் படுகொலை செய்துள்ளனர் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
கோர்ட்டு உத்தரவின்படி இன்று நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர். வாக்குச்சீட்டு முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரி எண்ணினார். இதில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் சிங் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனிடையே சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு கட்சிகளும் வீடியோ வெளியிட்டுள்ளன.
அந்த வீடியோவில், மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கும் முன்பு தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டுகளை எண்ணும்போது அதில் ஏதோ எழுதுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்த 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அக்கட்சி சார்பில் பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், 'ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. எந்த எல்லை வரை செல்லும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை' என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"மேயர் தேர்தலில் உலகமே பார்க்கும்படி அப்பட்டமாக ஜனநாயகத்தை கொன்ற பா.ஜ.க., ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள எந்த எல்லை வரை செல்லும் என கற்பனை கூட செய்ய முடியவில்லை! பல ஆண்டுகளுக்கு முன்பு, காந்தியை கோட்சே கொன்ற நாளான இன்று, கோட்சேவின் வாரிசுகள் காந்தியின் கொள்கைகளையும், அரசியலமைப்பின் மாண்புகளையும் படுகொலை செய்துள்ளனர்."
இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.