ஜார்க்கண்டில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த கார் மரத்தில் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
காயமடைந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்தில் உள்ள பக்மாரா பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. அந்த காரில் மொத்தம் 10 பேர் பயணித்த நிலையில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கிரித் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில், காரில் பயணம் செய்தவர்கள் தோரியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள திகோடி என்ற பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.